நாங்கள் இருப்பது சொந்த நிலம் மிரட்டாதீர் கம்போங் ஜாவா மக்கள் தொடர் போராட்டம் .

(பி.ஆர்.ஜெயசீலன்)

கிள்ளான், 

60 ஆண்டுகளாக நாங்கள் குடியிருக்கும் இந்த நிலம் தானா ஹராம் அல்ல. தங்களின் பெற்றோர் வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொந்த நிலம். அரசாங்க மேம்பாட்டுத்திட்டங்களுக்காக நாங்கள் விட்டுக் கொடுக்கத் தயார். ஆனால், அதற்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும். அதை விடுத்து மூன்றாம் தரப்பினரை வைத்து மிரட்டி எங்களை வெளியேற்றத் துடிப்பது சட்டத்திற்குப் புறம்பான செயல் என கடுமையாகச் சாடினர் கம்போங் ஜாவா நான்காவது மைல்

பந்திங் – தைப்பிங் நெடுஞ்சாலையை மேற்கொண்டு வரும் மேற்குக்கரை விரைவுச் சாலை நிறுவனம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கம்போங் ஜாவா நான்காவது மைலில் கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தங்களின் குடியிருப்பை அப்புறப்படுத்தி அந்த அதிவிரைவு நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

இத்திட்டத்தின் வழி இப்பகுதியில் உள்ள சுமார் 200 வீடுகள் பாதிப்புக்குள்ளாகின. இத்திட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே தங்களின் நியாயத்திற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்ததாக குறிப்பிட்ட செல்வேந்திரன் முனியாண்டி, அப்போது அவர்களின் உரிமைக்காகப் போராடி வந்தவர்களில் சிலர் இறந்து விட்ட நிலையில் இன்னமும் நாங்கள் நியாயத்திற்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இங்கு பாதிக்கப் பட்டவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலர் தங்களுக்கு கிடைத்த இழப்பீடுகளைப் பெற்றுக் கொண்டு இடம் மாறிச் சென்று விட்டனர். ஆனால் எங்கள் பகுதியில் உள்ள சுமார் 25 குடும்பங்கள் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய முழுமையான இழப்பீடு கிடைக்காத சூழலில் இந்த இடத்தைக் காலி செய்ய மறுத்து வருகின்றனர் என இப்பகுதி குடியிருப்பாளரான செல்வேந்திரன் தெரிவித்தார்.

இதுவரை 75 விழுக்காடு இழப்பீட்டுப் பணத்தை மட்டும் வழங்கியுள்ள நிலையில் மீதமுள்ள 25 விழுக்காடு பணம் கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இவ்விவகாரம் குறித்த நீதிமன்ற வழக்கு தொடுத்திருப்பதாகவும் அதன் விசாரணை ஜூலை 30ஆம் தேதியும் ஆகஸ்டு 21ஆம் தேதியும் நடைபெறும் நிலையில் அதற்குள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி தங்களை அப்புறப்படுத்த மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டு வரும் சில குறுக்குத் திட்டங்கள் தங்களை வேதனையடையச் செய்வதாக செல்வேந்திரன் குறிப்பிட்டார்.

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் மூன்றாம் தரப்பினரை களம் இறக்கி தங்கள் வீடுகளை முற்றுகையிடும் வகையில் மண்வாரி இயந்திரங்களை உள்ளே கொண்டு வருவதும் மின்சார இணைப்புகளை துண்டிப்பது, இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத ஆட்கள் குடியிருப்பு பகுதிகளில் நடமாடுவது போன்ற மிரட்டல் வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

குடியிருப்புப் பகுதியில் இருந்து வெளியே செல்லும் சாலைகளை மூடும் வகையில் இரவோடு இரவாக மணல்களைப் போட்டு குவிப்பது. காலியான வீடுகளை தரைமட்டமாக்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என அ.கருப்பையா, சந்திரகுமார், ஆகியோர் தெரிவித்தனர். இப்பகுதியில் வசித்து வரும் 25 குடியிருப்பாளர்களை அவர்கள் மனிதர்களாக மதிக்காமல் மிரட்டும் பாணியிலேயே நடந்து கொள்கின்றனர். பல ரூபங்களில் மேம்பாட்டு நிறுவனத்தின் கையாட்கள் தங்களை மிரட்டி வருவதாக குறிப்பிட்டனர். வீடுகளை காலி’ செய்யுங்கள் உடைக்கப் போகிறோம் என்று கூறி வரும் அவர்கள் எந்த ஒரு முறையான ஆவணத்தையும் தங்களிடம் காட்டுவது இல்லை.

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த விவாதத்தின்போது இரு  தரப்பினாருகிடையே கைகலப்பும் ஏற்பட்டது. இது குறித்து போலீஸ் புகார் செய்துள்ளதாக சி.குணசீலன், அமுதா ரெங்கன் ஆகியோர் தெரிவித்தனர். நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பொறுத்திருங்கள் அதற்குள் எங்களை மிரட்டுவதும் வீட்டை உடைத்து விடுவோம் என்று மண்வாரி இயந்திரங்களை கொண்டு வந்து நிறுத்துவதும் அத்துமீறிய செயல் என அவர்கள் கடுமையாகச் சாடினர்.

இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விளக்கமளித்த செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், 2015ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் போராட்டம் 10 ஆண்டுகளாகியும் நிறைவு பெறாமல் நீடித்து வருகிறது. மேற்குக்கரை விரைவுச்சாலை நிறுவனமும் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நீண்ட நாட்களை எடுத்துக்கொண்டதும் இச்சிக்கலுக்கு காரணமாகிறது.

அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான இழப்பீடு கொடுத்தால் நிச்சயமாக குடியிருப்பாளர்கள் காலி செய்ய தயாராக உள்ளார்கள் என குறிப்பிட்ட அவர், நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரையில் அவர்களை எந்தவொரு தொந்தரவும் செய்யக்கூடாது என மேம் பாட்டு நிறுவனத்தைக் கேட்டுக்கொள்ள! தாகவும் குடியிருப்பாளர்கள் போலீஸ் புகார் செய்திருப்பதுடன் தென்கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவரையும் இவ்விவகாரம் குறித்து சந்திக்கவிருப்பதாகவும் குண தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here