கோலாலம்பூர்:
ஜாலான் ஈப்போவில் கெபோங் ரவுண்டானாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் ஆற்றில் விழுந்த பாதசாரியின் உடல் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று, கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் துணை ஆணையர் முகமட் ஜம்சூரி முகமட் இசா கூறினார்.
குறித்த பாதசாரியின் உடல் காலை 7.30 மணியளவில் விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், உடல் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
“இந்த வழக்கு இப்போது சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் கீழ், கவனக்குறைவாகவோ அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நேற்று காலை சுமார் 11.45 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், பத்து மூடா மக்கள் வீட்டுவசதி திட்டத் (PPR) திசையில் இருந்து 39 வயதான வங்காளதேச நபர் ஓட்டி வந்த நிசான் சில்ஃபி கார் மோதி, ஆற்றில் விழுந்ததில் பாதசாரி நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.



















