News By Krishnan Raja
ஜோகூர் பாரு,
சர்வதேச இளம் ரோபோட் போட்டி (IYRC) ஆசியான் 2025 ஜூன் 13 முதல் 15 வரை மலேசியாவின் எடியூசிட்டி இஸ்கண்டாரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆசியான் நாடுகளிலிருந்து வந்த 800-க்கும் மேற்பட்ட இளைய கண்டுபிடிப்பாளர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வு அறிவியல் ,தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் உள்ள திறமைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டின் தலைப்பு “பசுமை ஆற்றல்” (Green Energy) ஆகும்.
பங்கேற்பாளர்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆற்றல் செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு ஏற்ற ரோபோடிக் தீர்வுகளை உருவாக்கும் வகையில் சவால்களை எதிர்கொண்டனர்.
இந்நிகழ்வை ஜோகூர் மாநில முதல்வர் டத்தோ ஒன் ஹாஃபிஸ் காஸி பிரதிநிதியாக இஸ்கண்டார் புத்ரி மாநகர மன்ற தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.
ஜோகூர் தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவி சன்சுவர்னா கணபதி, ஜூன் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆசியா சர்வதேச இளம் ரோபாட்டிக்ஸ் போட்டி (IYRC) யில், மலேசியாவை பிரதிநிதித்து பங்கேற்றார்.
படைப்பாற்றல் வடிவமைப்பு – மூத்த பிரிவு (Creative Design – Senior Category) யில் பல்வேறு ஆசிய நாடுகளிலிருந்து பங்கேற்ற 800-க்கும் மேற்பட்ட போட்டியாளர்களுடன் போட்டியிட்டு, தனது குழுவுடன் சேர்ந்து முதல் இடத்தை வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
சன்சுவர்னா, தனது குழுவின் தலைவராக செயல்பட்டு, ஹரீஷ் மற்றும் எட்ரியன் (வேறொரு பள்ளியைச் சேர்ந்தோர்) என்பவர்களுடன் இணைந்து “வனக் காப்பாளர் (Forest Ranger)” எனும் தீ அணைக்கும் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.
இந்த ரோபோ காட்டுத் தீயை தானாகக் கண்டறிந்து, மனிதர்கள் அடைய முடியாத இடங்களிலும் தீயை அணைக்கும் திறன் கொண்டதாகும். இது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், காட்டுப் பாதுகாப்பிற்கும் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாக வல்லுநர்கள் பாராட்டியுள்ளனர்.
இந்த குழுவினருக்கு ஆசிரியர் ஆடாம் வழிகாட்டியாக இருந்தார்.
மலேசியா இந்தப் போட்டியில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.