ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் பாலித் தீவுக்குக் கிழக்கே எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, சாங்கி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் உட்பட பாலித் தீவுக்குச் செல்லும், அங்கிருந்து புறப்படும் குறைந்தது 24 விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
ஃபுளோரஸ் தீவில் உள்ள லெவோட்டோபி லக்கி-லக்கி எரிமலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) வெடித்ததைத் தொடர்ந்து, அதன் எச்சரிக்கை நிலையை அதிகாரிகள் உச்சநிலைக்கு உயர்த்தினர்.
இதனால், ஆஸ்திரேலியா எங்கும் உள்ள நகர்களுக்கு ஜெட்ஸ்டார் ஏஷியா, வெர்ஜின் ஆஸ்திரேலியா உள்ளிட்ட விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன. ஏர் இந்தியா, ஏர் நியூசிலாந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சீனாவின் ஜுன்யாவ் ஏர்லைன்ஸ் விமானச் சேவைகளும் ரத்துசெய்யப்பட்டதாக பாலி அனைத்துலக விமான நிலையத்தின் இணையக்கத்தில் புதன்கிழமை குறிப்பிடப்பட்டது.
பாலித் தீவுக்கு அல்லது ஜகார்த்தாவுக்குச் செல்லும் பல விமானச் சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட், ஜெட்ஸ்டார் புதன்கிழமை காலை ரத்துசெய்ததாக சாங்கி விமான நிலைய இணையப்பக்கத்தில் சரிபார்த்தபோது தெரியவந்தது.
கருடா, இந்தோனேசியாவின் ஏர்ஏஷியா, பாத்திக்ஏர், சிட்டிலிங்க் ஏர்லைன்ஸ் ஆகிய விமானச் சேவைகள் பாதிக்கப்படவில்லை எனத் தெரிந்தது. அவை திட்டமிட்டபடி ஜகார்த்தாவுக்குப் புறப்படவிருந்தன.
புதன்கிழமை காலை நிலவரப்படி, வியாழக்கிழமை (ஜூன் 19) ஜகார்த்தாவுக்கு விமானச் சேவைகளில் பாதிப்பு இல்லை எனவும் தெரிகிறது.
ஃபுளோரஸ் தீவின் லபுவான் பஜோவுக்குச் செல்லும் பல உள்நாட்டு ஏர்ஏஷியா விமானச் சேவைகளும் ரத்துசெய்யப்பட்டன.
இந்நிலையில், 10 கிலோமீட்டர் உயரத்திற்குச் சாம்பலைக் கக்கிய லெவோட்டோபி லக்கி-லக்கி எரிமலையைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் எரிமலைக் குழம்பு வழிந்தோடியது. இதனால், குறைந்தது ஒரு கிராமத்திலிருந்து மக்கள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியேற்றப்பட்டதாக இந்தோனேசியாவின் பேரிடர் நிவாரண அமைப்பு தெரிவித்தது.





















