புத்ரா ஜெயா,
2025 உலகப் போட்டித் தன்மை தர வரிசையில் மலேசியா 23ஆவது இடத்தைப் பிடித்திருப்பது மடானி அரசாங்கத்தின் தலைமைத்துவத்தின் திறன்களைப் பிரதிபவிக்கிறது என்று வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
கடந்தாண்டு 34ஆவது இடத்தில் இருந்த மலேசியா, 2025இல் 11 இடங்களைக் கடந்து 23ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இது உலக அளவில் மலேசியாவின் தனித் திறனைப் பதிவு செய்யும் ஒரு சாதனையாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
2020ஆம் ஆண்டுக்குப் பிறகு இது மிகப்பெரிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு மடானி அரசாங்கத்தின் சீர்மிகு தலைமைத்துவமே காரணம் என்று அமைச்சர் குறிப்பிட்டார். ஆசியான் நாடுகளுக்கு மத்தியில் ஐந்து நாடுகள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அந்தப் பட்டியலில் மலேசியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகள் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்று ஙா கோர் மிங் கூறினார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள லூசானி அனைத்துலக நிர்வாக மேம்பாட்டுக் கழகம் இந்த தர வரிசையை வெளியிட்டுள்ளது.
பொருளாதாரச் செயல்பாடுகள், அரசாங்கத்தின் தனித் திறன், வணிகத்துறை திறன் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்தத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார செயல்பாட்டில் கடந்தாண்டு எட்டாவது இடத்தில் இருந்த மலேசியா, தற்போது நான்காவது இடத்தில் இருப்பது மலேசியாவின் பொருளாதார நிர்வாகத் திறமைக்குக் கிடைத்திருக்கும் சான்றாக இருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயல் திறன், வணிகத்தின் செயல் திறன் ஆகிய இரண்டும் எட்டாவது இடத்தில் உள்ளன.
சாதனைகளுக்கான அடித்தளமாகத் திகழ்கின்றன. சவால்மிக்க உலகளாவிய முதலீட்டு சூழ்நிலைகளில் இருந்து நாட்டிற்கு முதலீடுகளைக் கொண்டு வருவதில் மலேசியா அடைந்திருக்கும் சாதனை இந்தத் தர வரிசைப் பட்டியலில் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.
மடானி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மிகப்பெரிய பலன்களைத் தந்துள்ளன என்பதற்கு இதுவே மிகச் சிறந்த ஆதாரமாகும்.2024ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட மொத்த முதலீடு 378.5 பில்லியன் ரிங்கிட் ஆகும்.
இது நாட்டின் முதலீட்டு வரலாற்றில் ஆக உயர்வானது ஆகும். 2023இல் முதலீட்டு அளவு 329.5 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது. 2024இல் இந்த முதலீடு 14.9 விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்று மைடா எனப்படும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தரவுகள் கூறுகின்றன.
இந்த மொத்த முதலீட்டில் செமி கண்டக்டர், மின்னியல் பொருட்கள் தயாரிப்பு மட்டும் 48.1 பில்லியன் ரிங்கிட் என பதிவாகியிருக்கிறது. உலக நாடுகளின் முதலீட்டைக் கவர்வதில் உலகில் மூன்றாவது இடத்தில் மலேசியா இருக்கிறது. இண்டெல், மைக்ரோசாஃப்ட்,, அமேஸோன், இன்ஃபினியோன் ஆகிய தொழில்நுட்பப் பெரு நிறுவனங்கள் மலேசியாவில் முதலீடு செய்வதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன. உள்நாட்டில் அவற்றின் சந்தைகளை விரிவுபடுத்தும் திட்டங்களையும் அவை கொண்டுள்ளன என்று ஙா கோர் மிங் கூறினார்.
மடானி அரசாங்கத்தின் தலைமைத்துவத்தின் கீழ் மலேசியாவில் பொருளாதார வளர்ச்சி 2024ஆம் ஆண்டு 5.1 விழுக்காடு கடந்துள்ளது. உலக வங்கி, இதர அனைத்துலக பொருளாதார நிறுவனங்களின் மதிப்பீடுகளைக் காட்டிலும் இது மிக அதிகமாகும். அதேசமயம் இபிஎப் எனப்படும் தொழிலாளர் சேமநிதி வாரியம் இதுவரை இல்லாத அளவுக்கு 6.3 விழுக்காடு லாப ஈவு வழங்கி புதிய சாதனையைப் படைத்திருக்கிறது என்று அமைச்சர் சொன்னார்.’









