புத்ராஜெயா:
அனைத்து 156 ஊராட்சி மன்றங்களும் தங்கள் சேவைத்தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் வலியுறுத்தினார்.
மக்கள் நலனுக்கான வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் துரிதமாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். வர்த்தக நடவடிக்கைகள் சிறந்த முறையில் நடைபெறுவதையும் அவற்றின் கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
இதன்மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி துரிதமடையும். உலகளவில் மலேசியாவின் போட்டித்தன்மையும் உயரும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

1980ஆம் ஆண்டுகளில் இருந்ததுபோன்ற திட்ட அமலாக்கத்தில் ஏற்பட்ட காலதாமதப் பிரச்சினைகள் இனியும் தொடரக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் விடுத்துள்ள வேண்டுகோளை வரவேற்பதாகவும் ஙா கோர் மிங் கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் முனைப்புக்காட்டி வருகின்றது. இந்த இலக்கை அடைவதற்கு நாம் தரமான பொதுச்சேவையை வழங்க வேண்டும்.
திட்டங்களுக்கான அங்கீகாரமும் அமலாக்கமும் துரிதமடைய வேண்டும். இதன்வழி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும். முதலீட்டாளர்களைக் கவரக்கூடய நல்ல சூழலையும் உருவாக்க முடியும்.

உலகப் போட்டித்தன்மைப் பட்டியலில் மலேசியா 34ஆவது இடத்தில் இருந்து 23ஆவது இடத்திற்கு வந்திருக்கின்றது. இதன்வழி மலேசியாவின் வளர்ச்சி மிகத் துரிதமாக நடைபெறுவது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில் மலேசியர்கள் அனைவரும் ஒரு சகாப்தத்தை உருவாக்க முன்னோக்கி நகர வேண்டும். அதேவேளையில் ஊராட்சி மன்றங்களும் துரிதமாகச் செயல்பட வேண்டும். ஏனெனில் நேரம் என்பது பொன் போன்றதாகும் என்று அவர் மேலும் சொன்னார். கடந்த செவ்வாய்க்கிழமை மலேசிய ஊராட்சி மன்றத் தரப்பினரின் சங்கத்துடன் நடத்திய சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் பல விஷயங்கள் எழுப்பப்பட்டன.
ஒப்பந்த அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பதும் இதில் அடங்கும். இந்தச் சந்திப்புக்கு ஊராட்சி மன்றத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ முகமது ஃபட்லி பின் முகமட் கெனாலி, மலேசிய ஊராட்சி மன்றத் தரப்பின் சங்கத் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் பின் ஹுசேன் உள்ளிட்டவர்களும் ஊராட்சி மன்றப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.




















