நடராஜர் இடது காலைத் தூக்கி ஆனந்த நடனமிடும் திருகாட்சியை சிதம்பரம் திருக்கோயிலில் கண்டு தரிசிக்கலாம். பொதுவாகவே நடராஜர் அனைத்து திருத் தலங்களிலும் இதேபோன்றுதான் காட்சியளிக்கிறார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மட்டும் இடது காலை ஊன்றி, வலது காலை தூக்கி நடனமாடிய கோலத்தில் காட்சி தருவார்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வெள்ளியம்பலத்தில் இவ்வாறு அவர் வித்தியாச கோலம் காட்டுவதன் காரணம் என்ன? இதற்கு புராணங்களில் ஒரு கதை சொல்லப்படுகிறது. நடராஜரின் சிறப்பு மிக்க நடன கோலங்களில் மதுரையில் காட்சி தருவது மிகவும் சிறப்புக்குரியதாகும்.நடராஜர் ஐந்து நடன சபைகளில் திருநடனம் புரிகிறார். சிதம்பரத்தில் பொன்னம்பல சபையில் இவர் ஆனந்தத் தாண்டவம் ஆடி பக்தர்களை மகிழ்விக்கிறார். மதுரை மீனாட்சியம்மன் கோயில் இருப்பது வெள்ளியம்பலம்.
இங்கு அவர் ஆடுவது சந்தியா தாண்டவம். திருநெல்வேலியில் இருப்பது தாமிர சபை. இங்கு ஆடுவது முனி தாண்டவம். குற்றாலத்தில் இருப்பது சித்திரசபை. இங்கு அவர் ஆடுவது திரிபுரதாண்டவம். திருவாலங்காட்டில் இருப்பது ரத்தினசபை. இங்கு ஆடுவது காளி தாண்டவம். இந்த ஐந்து நடன சபைகளில் மதுரையில் மட்டும் நடராஜர் இடது கால் ஊன்றி வலது கால் தூக்கி சந்தியா தாண்டவம் ஆடுகிறார்.
இந்த நிகழ்ச்சி, பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணத்தில் 24வது படலமாக இடம் பெற்றிருக்கிறது.மதுரையில் மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த தெய்வீகத் திருவிழாவில் தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.
தெய்வீகத் தம்பதியின் அருள் வேண்டி காத்திருந்தனர். திருமண வைபவம் முடிந்து உணவருந்த வருமாறு சுந்தரேஸ்வரரும், அன்னை மீனாட்சியும் அனைவரையும் அழைத்தனர். அப்போது பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் ஈசனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தனர்: “ஐயனே, நாங்கள், தினமும் தங்களது பொன்னம்பல நடனத்தை தரிசித்த பிறகு தான் உணவு அருந்துவது வழக்கம்; அதனை இன்றும் கடைபிடிக்க விரும்புகிறோம், தாங்கள் தான் அருள்புரிய வேண்டும்”என்றனர். இதை கேட்ட இறைவன், அவர்களின் நியமத்தைக் காக்க விரும்பினார்.
அதே சமயம் அவர்களை சிதம்பரத்திற்குச் சென்று வரப் பணிக்கவும் அவர் விரும்பவில்லை. அவர்களிடமே சிதம்பரத்தை வரவழைக்க பெருங்கருணை கொண்டார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலேயே தான் திருநடனம் புரிந்து அருள்பாலிக்க, இந்தத் தலத்திலேயே வெள்ளியம்பலத்தை ஏற்படுத்தினார். அந்த அம்பலத்தில் திருநடனமும் புரிந்தார். இறைவனின் திருநடனத்தை கண்ட பதஞ்சலியும் வியாக்ரபாதரும் பெருமகிழ்வடைந்து உணவு அருந்தினர்.
இந்த மதுரைப் பெருநகரை விக்ரம பாண்டியன் ஆட்சி புரிந்து வந்தான். அவனுடைய மகன் ராஜசேகர பாண்டியனுக்கு ஒரு குறை. ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் 63 கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் மீதமுள்ள ஒரே கலையான நடனத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதிருந்தான். அதற்குக் காரணம், இறைவ நடராஜர் கலையாயிற்றே அது. அதை எப்படி தான் கற்பது என்ற பக்தி மேலீடுதான்.
ஆனால், அவனுடைய சமகாலத்தவனான கரிகாற்சோழன், அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத் தேர்ந்தவன் என்ற தகவல் ராஜசேகர பாண்டியனுக்குக் கிடைக்கிறது.உடனே இறைவனுக்கு உரியதான நாட்டியக் கலை, அவனது பக்தர்களும் கற்று மேன்மையுற வேண்டிய ஒன்றுதான் என்பதை உணர்ந்து கொண்டு, தானும் நடனம் கற்று அதில் முழுமையாக தேர்ச்சியும் பெற்றான். அப்படி தேர்ச்சி பெற்ற அவன், அந்தக் கலை எத்தகைய உடல் நலிவை, சோர்வைத் தருகிறது என்பதையும் அனுபவபூர்வமாக உணர்ந்தான்.
நிறைவாக, தான் கற்ற இந்த நாட்டியக் கலைக்கு இறைவனுடைய அருள் வேண்டும் என்பதால் மதுரை வெள்ளியம்பல நடராஜரிடம் ஆசீர்வாதம் பெற வந்தான். நடராஜரைப் பார்த்த அவன் அப்படியே திகைத்து நின்றான். நடனத்தை உடல் சோர்வளிக்கும் கலையாகத் தன் அனுபவத்தில் அறிந்திருந்த அவன், காலம் காலமாக வலக்காலை ஊன்றி இடக்காலைத் தூக்கி நடனமாடி கொண்டிருக்கும் நடராஜருக்கு எவ்வளவு துன்பமாக இருக்கும் என நினைத்து மிகவும் வேதனையடைந்தான்.
“அடடா, அவரது வலதுகால்தான் எவ்வளவு வலிக்கும்” என்று வருந்திய மன்னன், இதை யாரிடம் எப்படி கேட்பது என்று யோசித்தான்: “ஈசனிடமே நேரடியாக முறையிட்டுவிடலாமா? ஆனால் தேவர்கள், முனிவர்கள் என்று மேன்மக்கள் பலரும் இதைப் பற்றி சிந்திக்காத போது நாம் சிவனிடம் கேட்பது அதிகப்பிரசங்கித்தனமாகாதா?” என நினைத்தான்.
இந்த சூழலில் சிவராத்திரி திருவிழா வந்தது. நான்கு கால பூஜை முடித்து விட்டு நடராஜரின் எதிரில் நின்றான் ராஜசேகர பாண்டியன். இடது பாதம் தூக்கி வலது பாதத்தில் நின்று கொண்டிருந்த ஈசனைப் பார்த்து கண்களில் நீர் பெருக்கினான். “இறைவா, உனக்குக் கால் வலிக்கிறதோ இல்லையோ, எனக்குப் பெரிதும் வலிக்கிறது. எனக்காக கால் மாறி ஆடக்கூடாதா?” என்று மனம் உருக வேண்டினான்.
பக்தனுக்காக இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி ஆடிக்காட்டினார் நடராஜப் பெருமான். “எனக்காகக் கால் மாறி ஆடிய பெருமானே, இதே திருக்கோலத்தில் பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் தந்தருள வேண்டும்” என்று நெகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டான் மன்னன். அன்றிலிருந்துதான் மதுரை வெள்ளியம்பல நடராஜர் கால் மாறி ஆடிய படி திவ்ய தரிசனம் அருள்கிறார்.
நடராஜரின் கால் மாறி ஆடிய இந்த சந்தியா தாண்டவம் பற்றி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த வல்லாளசேன மன்னரின் ‘நைக்தி செப்பு பட்டய’த்தில் குறிப்பு காணப்படுகிறது. பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த ஸ்ரீசைலம் கோயிலில், ஆனந்த தாண்டவத்தை போன்ற சந்தியா தாண்டவ சிற்பம் உள்ளது என்றும் தகவல் உள்ளது.




















