கோலாலம்பூர்:
வரும் 16வது பொதுத்தேர்தலில் (GE16) போட்டியிடப்போவதில்லை என்றும், இந்த நாடாளுமன்ற காலம் முடிவடைந்தவுடன் PKR கட்சியிலிருந்து விளங்குவதுடன் கட்சி தேர்தலிலும் பங்கேற்க போவதில்லை என்று, பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ரஃபிசி ராம்லி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
“அமைச்சர்பதவியை விட்டுக்கொடுக்க முடிந்த எனக்கு தேர்தலில் போட்டியிடாமலிருப்பது பெரிய விஷயம் இல்லை,” என அவர் கூறினார்.
கடந்த மே மாதத்தில் நடைபெற்ற PKR கட்சித் தேர்தலில் நூருல் இஸ்ஸா அன்வாரிடம் தோல்வியடைந்த பின், கட்சியின் அரசியலில் பங்குபற்ற விருப்பமில்லை என்றும், அரசியலிலிருந்து ஓய்வு பெற்று, ஒரு சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு, பாமர மக்கள் சந்திக்கும் சவால்களை நேரடியாக சென்று பார்த்து, உதவ விரும்புவதாகவும் அவர் கூறினார்.
“மூன்று, நான்கு ஆண்டுகள் அரசியலில் இருந்த அனுபவம் எனக்கு பயனுள்ளதாக இருக்கும். அரசியல் இல்லையென்றாலும், மக்களுக்கு மேலும் நன்கு சேவை செய்ய முடியும்,” என அவர் கூறினார்.




















