பாதுகாப்பு முன்னிலை – தினாங் இரவுச் சந்தை பகுதியில் லாபிஸ் நகராண்மைக் கழகம் அதிரடி நடவடிக்கை.

News By பவநி

தினாங், 

தாமான் தினாங் இரவுச் சந்தையில் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வாகன நெரிசலால் விபத்து ஏற்படும் அபாயங்கள் லாபிஸ் நகராண்மைக் கழக கவனத்திற்கு வந்தன. இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அந்த கழகம் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட நடவடிக்கையாக, ஒவ்வொரு புதன்கிழமையும் தினாங் ஸ்டேஷன் கிளை சாலைப் போக்குவரத்து பிரிவு, காவல்துறை மற்றும் லாபிஸ் நகராண்மைக் கழகத்தின் அமலாக்கப் பிரிவு இணைந்து, இரவுச் சந்தை பகுதியில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்கின்றன. இதன் மூலம், போக்குவரத்து நெரிசல், சாலையோர வாகன நிறுத்தம் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

பாதுகாப்பு நடவடிக்கையாக, சாலை ஓரங்களில் பாதுகாப்பு கோன்கள் வைக்கப்பட்டு, சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் நகர முடியும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், சிகாமட் பொதுப்பணி இலாகா மூலம், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதைத் தடுக்கும் வகையில், விரைவில் மூன்று அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட உள்ளன. இது பொதுமக்களுக்கு தெளிவான தகவலை வழங்குவதோடு, சட்ட அமலாக்கத்தையும் உறுதி செய்யும்.

லாபிஸ் நகராண்மைக் கழகம், “பொதுமக்களின் பாதுகாப்பே எங்களின் முன்னிலை. விபத்துகளை தவிர்க்க, பொதுமக்கள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தாமல் இருக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் பொதுமக்களுக்கு நன்றியையும் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here