கோலாலம்பூர்,
முட்டைக்கு வழங்கப்படும் மானியம் மே 1ஆம் தேதியிலிருந்து ஐந்து காசு குறைக்கப்பட்டபோதும், சந்தையில் முட்டை வழங்கல் நிலைமை நிலையானதாகவும், மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமானதாகவும் உள்ளது என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “மானியத்தொகை குறைக்கப்பட்டதால் முட்டை உற்பத்தி பாதிக்கப்படவில்லை. இது உள்ளூர் உற்பத்தி அமைப்பின் நிலைத்தன்மையும், தாங்கும் சக்தியும் அதிகரித்ததை காட்டுகிறது,” என்று கூறினார்.
அரசு கடந்த மே மாதம், ஒரு முட்டைக்கு வழங்கப்படும் மானியத் தொகையை 10 காசிலிருந்து 5 ஆக குறைத்தது. இது ஆகஸ்ட் 1ஆம் தேதியுடன் முழுமையாக நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முட்டை உற்பத்தி தொடரும் என்பதை உறுதி செய்யும் வகையில் தொழில்துறையினர் வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நீண்ட காலமாக விலைக் கட்டுப்பாடுகள் மற்றும் மானியங்களை பராமரிப்பது நாட்டின் நிதி நிலைத்தன்மைக்கும், உள்ளூர் உற்பத்தித் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கும் இடையூறாக இருக்கும் என்பதையும் அரசு கவனத்தில் எடுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















