வாஷிங்டன்:
‘ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டால் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் கடும் பொருளாதார தடையை எதிர்கொள்ள நேரிடும்’ என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பைத் தொடர்ந்து, ‘நேட்டோ’ அமைப்பின் தலைவர் மார்க் ருட்டேயும் மிரட்டல் விடுத்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. ராணுவ ஒத்துழைப்புக்கான, நேட்டோ எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போர் துவங்கியது. இந்த அமைப்பில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து, ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடையை விதித்தன. ஆனால் இதை மீறி, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை வாங்கி வருகின்றன.
இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதிபராக பதவியேற்ற ஜனவரியிலிருந்து தற்போது வரை இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பலமுறை தொலைபேசியில் பேசியுள்ளார். இந்த பேச்சுக்கள் சில சமயங்களில் ஒரு மணிநேரத்திற்கு மேல் நீண்டுள்ளன.
ஆனாலும் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா குறைக்கவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உக்ரைனும் வலுவான பதிலடி தந்து வருகிறது.
புடினுடனான பேச்சு பலனளிக்காததால் சமீபத்தில் கோபமடைந்த டிரம்ப், ‘காலையில் இனிக்க இனிக்க பேசும் அதிபர் புடின், இரவில் உக்ரைன் மீது குண்டு வீசுகிறார். போரை நிறுத்த ரஷ்யாவுக்கு 50 நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் அமைதி பேச்சுக்கு ஒப்புக்கொள்ளவில்லை எனில், 100 சதவீத வரி விதிக்கப்படும்’ என எச்சரித்தார்.
மேலும், உக்ரைனுக்கு ஆயுதங்களை வினியோகிக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், நேட்டோ அமைப்பின் பொதுச் செயலரும், நெதர்லாந்தின் முன்னாள் பிரதமருமான மார்க் ருட்டே, அமெரிக்கா சென்று, அதிபர் டிரம்ப் மற்றும் அந்நாட்டு எம்.பி.,க்களை சந்தித்து ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும் உக்ரைனுக்கான ஆயுத தேவை குறித்து பேசினார்.



















