கோலாலம்பூர்,
ஒருங்கிணைக்கப்பட்ட 2025 தேசிய முகவரி முறைமை அமலாக்க மாநாட்டை தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபட்ஸில் நேற்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். எம்சிஎம்சி எனப்படும் மலேசியத் தொடர்பு பல்லூட ஆணையத்தின் வழி தொடர்புத்துறை அமைச்சு ஜூலை 16 தொடங்கி நேற்று வரை இந்த மாநாட்டை நடத்தியது.
அரசாங்கம், தொழில்துறை, கல்வியாளர்கள், சிவில் சமூகம் ஆகிய தரப்புகளைச் சேர்ந்த 500க்கும் அதிகமானோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். நாட்டில் ஒரு முழுமையான தேசிய முகவரி முறைமையை அமல்படுத்துவதற்கு ஒரு முக்கியத் தளமாக இந்த மாநாடு விளங்கியது. முகவரி விவகாரத்தை மிகச்சிறந்த முறையில் நிர்வகிப்பதற்கான வியூகக் கொள்கையில் இம்மாநாடு முழு கவனத்தையும் செலுத்தியது என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நோக்கத்திற்கு வழிகாட்டும் அதேசமயத்தில் மலேசிய முகவரிகள் நிர்வாகத்தை உலகின் மிகச்சிறந்த தடத்தில் நிர்வகிப்பதற்கும் நிபுணத்துவமிக்கவர்கள் நடத்திய தொழில்நுட்பம், கண்காட்சி ஆகியவை பயன்மிகு அம்சங்களாக இருந்தன. மேலும் இவர்களுக்கிடையிலான விவாதங்கள், கூட்டு ஒருங்கிணைப்புகள், ஏஜென்சிகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதாகவும் இருந்தது என்று அவர் சொன்னார்.
தேசிய முகவரி முறைமையானது கொள்கை, திட்டமிடல், நிர்வாகம் ஆகியவற்றை தேசிய அளவில் விவாதங்களைத் தொடங்குவதற்கும் ஒரு களமாக மாறியிருக்கிறது. மலேசியாவில் முகவரி நிர்வாகத்தை ஒருங்கிணைத்து நாடு முழவதும் புத்தாக்க முறையில் முகவரி நிர்வாகங்கள் தொடர்பில் மிகச்சரியான தீர்வுகளுக்கும் இந்த மாநாடு முக்கியக் களமாகத் திகழ்ந்தது என்று டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.
மலேசியா 12 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான முகவரிகளைக் கொண்டிருக்கிறது. இருப்பினும் ஒரே மாதிரியான மிக நேர்த்தியான தேசியத் தரவுகள் மையத்தை அது இன்னமும் கொண்டிருக்கவில்லை. இதனால் அதன் சேவைகளும் நடவடிக்கைகளும் பாதிப்பை எதிர்கொள்கின்றன. கொள்கைத் திட்டமிடல், அவசர அழைப்புக்குப் பதிலளித்தல் போன்றவையும் முறையாக வகுக்கப்படவில்லை. இதனால் வெளித் தொழில்நுட்பங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும் ஒட்டுமொத்தமான சேவை மேம்பாட்டிற்கும் டிஜிட்டல் பொருளாதார இலக்கை நோக்கி மலேசியாவைக் கொண்டு செல்வதற்கு பிரதான ஆதரவுக் களமாக தேசிய முகவரி முறைமை அடையாளம் காணப்பட்டிருக்கிறது. விவேக நகரங்கள் மேம்பாடு, ஒருங்கிணைக்கப்பட்ட பொதுப் போக்குவரத்துகளில் விவேக முறைகளை அமல்படுத்துதல் போன்ற சாத்தியக்கூறுகளையும் இந்த முறைமை கொண்டிருக்கிறது. தேசிய முகவரி முறைமையானது ஒட்டுமொத்தத்தில் நாட்டு மக்களுக்குப் பல்வகைப் பலன்களைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னியல் வாணிபம், போக்குவரத்து, கூரியர் சேவைகள் போன்றவற்றை வலுப்படுத்துவதற்கும் தேசிய முகவரி முறைமை பயன்படும் என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஓர் இடத்தின் முகவரியை மிகச்சரியாகவும் துல்லியமாகவும் காட்டக்கூடிய அம்சங்களை இந்தப் புதிய முறைமை கொண்டிருக்கும். இதன்வழி மிகத் துரிதமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பட்டுவாடா செய்வதற்கு இது ஒரு மிகப்பெரிய களமாகவும் திகழ்வதோடு தவறாகப் பட்டுவாடா செய்யப்படும் குறைபாடுகளையும் குறைக்கும் என்று டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.
























