பாசீர் மாஸில் உரிமம் இல்லாத ஒரு வளாகத்தில் விருந்தில் ஈடுபட்ட 10 பேர் கைது

பாசீர் மாஸ், நவம்பர் 29 :

இங்குள்ள கம்போங் பாசீர் பாரிட்டில், நேற்று இரவு ஒரு குடிசையில் விருந்தில் ஈடுபட்டதற்காக ஐந்து பெண்கள் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருந்து மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வு நடத்துவதற்கோ உரிமம் இல்லாத வளாகத்தில் நடந்த சோதனையின் போது, அந்த நிகழ்வினை ஒருங்கிணைத்த 63 வயதான ஒரு ஆடவரையும் கைது செய்தனர்.

இரவு 11.30 மணியளவில் மாவட்ட குற்றப்பிரிவு குழுவினரால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பாசீர் மாஸ் காவல்துறை தலைமை துணை ஆணையர் நசாருடின் முஹமட் நசீர் தெரிவித்தார்.

“தமக்கு கிடைத்த ஒரு ரகசிய தகவலின் பேரில், போலீசார் அந்தக் குடிசையை சோதனை செய்தனர் மற்றும் குடிசைக்குள் விருந்தில் 10 சந்தேக நபர்கள் கலந்து கொண்டதையும் கண்டனர்.

“பின்னர் அவர்கள் 10 பேரையும் தடுத்து வைத்ததுடன் பல்வேறு வகையான கரோக்கே உபகரணங்களையும் போலீசார் கைப்பற்றினர்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட 10 பேருக்கும் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர்களில் மூன்று பேர் மெத்தாம்பேட்டமைனுக்கு நேர்மறையாக இருப்பதைக் காட்டியதாக நசாருடின் கூறினார்.

“கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வரும் அந்த விருந்தின் ஒருங்கமைப்பாளர், தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பானங்கள் மற்றும் உணவுகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலித்ததாக எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.

“இந்த விற்பனை நிலையம் வாரத்திற்கு மூன்று முறை இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை திறந்திருக்கும்,” என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட 31 முதல் 66 வயதுக்குட்பட்ட ஆண்களும் பெண்களும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 மற்றும் தொற்று நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் (பாதிக்கப்பட்ட உள்ளூர் பகுதிகளில் உள்ள நடவடிக்கைகள்) விதிமுறைகள் 2020 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here