ஜூலை 24, 2025 | 11:59 AM
கோலாலம்பூர்,
புதிய மக்கள் நலத்திட்டத்தின் அறிவிப்பு, மலேசியர்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இனம், மதம் மற்றும் பின்னணியைத் தாண்டி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மடானி அரசாங்கத்தின் உறுதியான பணிப்புலனுக்கே இது ஒரு சிறந்த சான்று என அவர் கூறினார்.
ரொக்க உதவிகள், இலக்கிடப்பட்ட மானிய திட்டங்கள், வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்கும் முன்தொடக்கங்கள், வரலாறு காணாத அளவிலான வெளிநாட்டு முதலீடுகள் என, இந்தியர்களை உள்ளடக்கிய மலேசியர்களின் வாழ்வை மேம்படுத்த பலதரப்பட்ட முயற்சிகளை மடாணி அரசு மேற்கொண்டு வருகிறது.
“சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வரும் பிரதமருக்கு, மக்களின் சார்பில் என் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என ரமணன் கூறினார்.
மக்களின் நல்வாழ்வு, பொருளாதார மேம்பாடு மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகியவை அரசாங்கத்தின் முக்கியக் குறிக்கோள்கள் எனவும், மக்களின் முழுமையான ஆதரவுடன் இவை நிறைவேறும் என்பதில் தனது உறுதிபாட்டை அவர் வெளிப்படுத்தினார்.





















