பிரதமரின் சிறப்பு அறிவிப்பு ஒட்டுமொத்தமாக மக்களுக்கானதாகும்- அமைச்சர்கள் வரவேற்பு

கோலாலம்பூர், 

மலேசியர்களுக்கு மிகப் பெரிய அளவில் பலன்களை வழங்கும் மத்திய அரசாங்கத்தின் பல்வேறு சிறப்பு அறிவிப்புக்களுக்கு மத்திய அமைச்சர்கள் சிலர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நன்றி பாராட்டினர்.
18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் ஒரே தடவை உதவித் தொகையான 100 ரிங்கிட் ரொக்கம் உட்பட ரோன் 95 பெட்ரோல் விலை குறைப்பும் அதில் அடங்கும்.

பிரதமரின் இந்த நடவடிக்கையானது மலேசிய மக்களின் நலன்களில் மத்திய அரசாங்கத்தின் அக்கறையை காட்டுவதாகவும் அவர்களின் நிதிச் சுமையை குறைப்பதாகவும் இருக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

பிரதமரின் இந்த வெகுமதிகளுக்கு தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாமி பட்ஸில் நன்றி தெரிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்புக்களானது மலேசியர்களுக்கு நிம்மதியைத் தருவதோடு பொருளாதார நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமையும். அதேசமயம் நாட்டின் நிதி நிலையையும் வலிமைப்படுத்துவதாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்து மடானி அரசாங்கம் இந்தப் புதிய சலுகைகளை, வெகுமதிகளை வழங்கியிருக்கிறது. பல்வேறு உதவிகளின் வழி மக்களின் சுமைகளைக் குறைப்பதில் தனக்குள்ள கடப்பாட்டை மத்திய அரசாங்கம் மிகச் சரியான நேரத்தில் நிறைவேற்றியிருக்கிறது என்று தம்முடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு பதிவில் ஃபாமி தெரிவித்தார்.

மக்களின் நலன்களைக் காக்கும் பொறுப்புடைமையில் மடானி அரசாங்கம் எந்த அளவுக்கு தீரத்துடன் செயல்படுகிறது என்பதை பிரதமரின் இந்த அறிவிப்புக்கள் பிரதிபலிக்கின்றன என்று கூறினார்.

மலேசியர்கள் மீது கொண்டிருக்கும் அதீத அக்கறையின் வெளிப்பாடுதான் மடானி அரசாங்கத்தின் இந்த சலுகைகள் அறிவிப்பு என்று விவசாயம், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு குறிப்பிட்டார்.

பதவியேற்ற முதல் நாளிலிருந்து இதுதான் எங்களது விருப்பங்களாகவுக் இலக்குகளாகவும் இருந்திருக்கின்றன. செலவு செய்யப்படும் ஒவ்வொரு காசும் மக்களின் கௌரவத்தை தூக்கி நிறுத்துவதாக இருக்க வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் விருப்பமாகவும் இலக்காகவும் இருந்தது என்று தம்முடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ் புக் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் ஓர் அறிக்கையில் முகமட் சாபு குறிப்பிட்டார்.

மக்கள், மக்கள், மக்கள் என்பதுதான் பிரதமரின் சிறப்பு அறிவிப்புகளில் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. மலேசியர்களின் சுமைகளைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுப்பதில் மடானி அரசாங்கத்திற்கு உள்ள கடப்பாடுகள் இதில் தெளிவாக பிரதிபலிக்கப்பட்டன என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸலிஹா முஸ்தாபா கூறினார்.

மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்கப்பட்டிருக்கிறது. அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு முன்னுரிமை தரப்பட்டிருக்கிறது. அரசாங்கம் இதில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று அவர் அப்பதிவில் தெரிவித்தார்.

மலேசியாவின் தாராள பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் மலேசியர்களுக்கான இந்த சிறப்பு அறிவிப்பு அமைந்திருக்கிறது என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் அவரின் அதிகாரப்பூர்வ ஃபேஸ் புக் பதிவில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பெட்ரோல் விலையை குறைக்கும் தம்முடைய தேர்தல் வாக்குறுதியை பிரதமரால் உடனடியாக நிறைவேற்ற முடியவில்லை. அரசாங்கத்திற்கு பொறுப்பேற்றபோது நாட்டின் பொருளாதாரம் ஆரோக்கியமாக இல்லாததே இதற்கான காரணமாகும். அதிகரித்து வந்த கடன், உயர் பண வீக்கம், வேலை இல்லாதோரின் விகிதம் அதிகரிப்பு, வெளிநாட்டு நேரடி முதலீடு குறைவாக இருந்தது போன்றவை இந்தத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பெரும் இடையூறாக இருந்தது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

பிரதமரின் நேற்றைய அறிவிப்பில் ரோன் 95 பெட்ரோல் விலை 6 காசு குறைக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here