புத்ராஜெயா,
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) இரண்டாம் முனையம் வழியாக பயணிகள் போல நடித்து நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 13 வெளிநாட்டவர்களின் திட்டம் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான AKBS-இன் கண்காணிப்புப் பிரிவால் நேற்று வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
ஒரு பெண் உட்பட ஒன்பது இந்தியர் மற்றும் நான்கு பாகிஸ்தானியர்களே இந்த முயற்சியில் ஈடுபட்டவர்கள் என AKBS வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் KLIA-வின் டிரான்சிட் பகுதியில் உடைகளை மாற்றிக் கொண்டு புதிதாக வந்த பயணிகளைப் போல நடித்து, 270 வெளிநாட்டவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கலந்து அதிகாரிகளை ஏமாற்ற முயன்றனர். மேலும், குடிநுழைவுத் துறை சோதனைக்கு உட்பட்ட பிறகும், சோதனைத் தடத்தை மீண்டும் நுழைய அவர்கள் முயன்றது பதிவு செய்யப்பட்டுள்ளது.
அணுக்கமான கண்காணிப்பு மற்றும் துரித செயல்பாடு காரணமாக இந்த சூழ்ச்சி தோல்வியடைந்ததாக AKBS நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்களை அதிகாரிகள் அவதானித்ததோடு, குடிநுழைவுத் துறையின் கட்டுப்பாட்டுப் பகுதியை எட்டுவதற்கு முன்னரே அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இந்த சம்பவம், விமான நிலையத்தின் பாதுகாப்புத் தரத்தை உறுதி செய்வதிலும், சட்டவிரோத நுழைவுகளை தடுக்கும் நடவடிக்கைகளிலும் ஊக்கமாக இருக்குமெனவும், அதனை தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிகிறது.




















