பலர் என்னை வழக்கறிஞராகவும், இன்று ஒரு சட்ட நிறுவனத்தின் பங்குதாரராகவும் அறிந்திருப்பீர்கள். ஆனால், வாடகை வண்டி ஓட்டுநரின் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் எவ்வாறு படிப்படியாக சட்டத் துறைக்குள் வந்தார் என்பது பலருக்கு தெரியாது. என் பெற்றோரின் கடின உழைப்பும் விடாமுயற்சியும், கல்வி ஒருவரின் வாழ்க்கைப் பாதையை மாற்றும் ஆற்றல் கொண்டது என்பதை எனக்குக் கற்றுத் தந்தன. பின்னர் மலாயா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றபோது, எனது சட்டத் துறை வழிகாட்டியான பேராசிரியர் டாக்டர் அஸ்மி ஷரோமை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் கற்பித்த பாடங்கள் சட்டம் பற்றிய என் புரிதலை விரிவுபடுத்தியதோடு, இன்று வரை உறுதியாகப் பின்பற்றி வரும் எனது அரசியல் நெறிமுறைகளையும் வடிவமைத்தன என ஸ்கூடாயில் டிஏபி சார்பில் போட்டியிடும் கார்த்தியாயினி கருத்துரைத்தார்.
“வரம்பற்ற அதிகாரம், மனிதனை முற்றிலும் சீரழிக்கிறது.”
பேராசிரியர் அஸ்மி ஒருமுறை என் வாழ்நாள் முழுவதும் மனதில் நிலைத்திருக்கும் சிந்தனையைப் பகிர்ந்தார்: ஒவ்வொருவருக்கும் தங்கள் குரலை வெளிப்படுத்தும் உரிமை இருப்பது மிக முக்கியம். இது இளைய தலைமுறையை மட்டும் பற்றியது அல்ல. பயமின்றி சுதந்திரமாகப் பேசுவதற்கான உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும்; ஏனெனில் அது நமது அடிப்படை உரிமையாகும். இது இல்லையெனில் ஒரு நாடு உண்மையாக முன்னேற முடியாது.”
அவர் அடிக்கடி இவற்றை எங்களுக்கு நினைவூட்டுவார்:
“விவாதமின்றி, திறந்த கலந்துரையாடலின்றி, பகுத்தறிவான விமர்சனமின்றி இருந்தால், அதிகாரத்தில் இருப்பவர்கள் அந்த அதிகாரத்தை எளிதில் தவறாகப் பயன்படுத்தலாம். அதனால்தான் ஒவ்வொரு சாதாரண குடிமகனுக்கும் எழுந்து நின்று பேசும் உரிமை இருக்க வேண்டும்.”இந்த வார்த்தைகள், வழக்கறிஞராக எனது வழிகாட்டும் கோட்பாடுகள் மட்டுமல்ல; இன்று மாநிலச் சட்டமன்ற வேட்பாளராக நான் முன் வரத் தீர்மானித்ததற்கான அடிப்படைக் காரணமும் இதுவே.ஏனெனில் அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் முன்பாக, சாதாரண மக்களின் குரல்களே பெரும்பாலும் எளிதில் புறக்கணிக்கப்படுகின்றன.எல்லைத் தாண்டி பணிக்குச் செல்லும் மக்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலாலும் குறைந்தளவிலான வாகன நிறுத்துமிடங்களால் எதிர்கொள்ளும் தினசரி சிரமங்கள்; உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவால் பெரும்பாரத்தைச் சுமக்கும் குடும்பங்கள்; திடீர் வெள்ளம் ஏற்படும் ஒவ்வொரு முறையும் அச்சத்தில் வாழும் குடியிருப்பாளர்கள் — இவையே ஸ்கூடாய் மக்களின் உண்மையான சவால்களும் வேதனைகளும் ஆகும்.

இந்தச் சிக்கல்களை இனியும் புறக்கணிக்க முடியாது.
ஸ்கூடாய் மக்களின் கவலைகளுக்கும் தேவைகளுக்கும், சட்ட அறிவுடன் துணிவாக குரல் கொடுத்து, அவர்களின் உரிமைகளுக்காக அச்சமின்றி போராடத் தயாராக இருக்கும் ஒருவர் தேவை.
ஸ்கூடாய்க்காக, உங்களிடம் நான் வழங்கும் உறுதிமொழிகள்:
1. போக்குவரத்து முனையங்களில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடங்களை அமைப்பதோடு, நெரிசலான வணிகப் பகுதிகளில் நேர வரையறையுடன் கூடிய வாகன நிறுத்த முறையை அமல்படுத்துவேன்.
2. வெள்ளத்திற்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து, இந்தப் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணத் தேவையான வளங்களைப் பெற போராடுவேன்.
3. சமூகங்களில் அன்பும் நம்பிக்கையும் நிலைத்திடவும், நகர வறுமையின் சுமை குறையவும் பண்டிகைக் கால உதவி திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பேன்.
4. பகுத்தறிவும் பொறுப்புணர்வும் கொண்ட அரசியலைக் கடைப்பிடித்து, உங்களுடன் இணைந்து சிறந்த ஸ்கூடாயை உருவாக்குவேன். சட்டம் என்பது நீதியையும் சமத்துவத்தையும் பாதுகாக்கும் கருவி மட்டுமல்ல; மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் வலிமையான வழிமுறையும் ஆகும் என நான் நம்புகிறேன். இந்த முறை, நீதிமன்றத்தில் காட்டிய அதே உறுதியை மாநிலச் சட்டமன்றத்திற்கும் கொண்டு சென்று, ஸ்கூடாய் மக்கள் ஒவ்வொருவருக்காகவும் குரல் கொடுக்க விரும்புகிறேன். உங்கள் ஆதரவையும், மாநிலச் சட்டமன்றத்தில் உங்கள் குரலாக இருக்க எனக்கு ஒரு வாய்ப்பையும் வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஜூலை 11-ஆம் நாள், உங்கள் சொந்த ஊர் திரும்பி வாக்களியுங்கள் என டிபிஏ சார்பில் ஸ்கூடாயில் போட்டியிடும் கார்த்தியாயினி கேட்டுக் கொண்டார்.



















