குவாந்தான்,
கெத்தும் போதை நீர் வைத்திருந்த குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ஒரு நபரிடம் இருந்து சுமார் 12,000 ரிங்கிட் லஞ்சம் கேட்டுப் பெற்றதாக 6 போலீஸ்காரர்களை பகாங் மாநில எம்ஏசிசி கைது செய்து காவலில் வைத்திருக்கிறது. தெமர்லோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த 6 பேரையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கும் மனுவை எம்ஏசிசி தாக்கல் செய்தது.
இதனை அடுத்து மாஜிஸ்திரேட் கமிஸா இஸ்மாயில் கைது செய்யப்பட்டவர்களை ஆகஸ்டு 6ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கும் ஆணையைப் பிறப்பித்தார். இவர்கள் 30 முதல் 50 வயது மதிக்கத்தக்கவர்கள். நேற்றுமுன்தினம் அவர்கள் வாக்குமூலம் அளிக்க தெமர்லோ எம்ஏசிசி அலுவலகம் வந்தபோது இரவு 9 மணிக்கு கைது செய்யப்பட்டனர்.
கெத்தும் போதை நீர் வைத்திருந்ததாக நம்பப்படும் 5 பேர் கடந்த மே மாதம் தெமர்லோ மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர். அப்போது அந்த ஐவரின் தரகராகச் செயல்பட்ட ஒரு நபரிடம் இருந்து லஞ்சப் பணத்தை ஒரு போலீஸ்காரர் பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது என்று தகவலறிந்த வட்டாரம் கூறியது.
இதனை அடுத்து மொத்தம் 6 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதை பகாங் மாநில எம்ஏசிசி இயக்குநர் முகமட் சுக்கோர் மாமுட் உறுதிப்படுத்தியுள்ளார். 2009ஆம் ஆண்டு எம்ஏசிசி சட்டம் ஷரத்து 17(ஏ) கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.









