முன்னாள் அமைச்சரின் மகன் மீது தாக்குதல் – மோட்டார் சைக்கிள் போலி எண்களைக் கொண்டிருந்ததாக சந்தேகம்

கோலாலம்பூர்,

முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லியின் மகன் மீது புத்ராஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடியில் நேற்று மாலை நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையதாக நம்பப்படும் இரு நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் போலி பதிவு எண்களைக் கொண்டிருந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பதிவு எண்களை ஆய்வு செய்ததில் இந்த சந்தேகம் உருவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட இரு சந்தேக நபர்களையும் தீவிரமாகத் தேடி வருவதாக சிலாங்கூர் மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியவர்கள் இரண்டு நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாலும், அவர்களின் முழுமையான அடையாளங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஊசியில் இருந்த திரவத்தின் தன்மை குறித்து போலீசார் இன்னும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில், புத்ராஜெயா பேரங்காடியின் பயணிகள் ஏற்றுமிடப் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது. தாக்குதலுக்குள்ளானவர் ஒரு சிறுவன் என்பதும், தற்போது சிலாங்கூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஷாசெலி தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here