கோலாலம்பூர்,
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கு முன்பாகவே எதிர்க்கட்சிகள் மந்திரி பெசார் பதவிக்காகத் தங்களுக்குள் மோதிக்கொள்வதாகப் பக்காத்தான் ஹரப்பான் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விமர்சித்துள்ளார்.
சிகாமட்டில் நடைபெற்ற ‘ஒற்றுமை’ இரவு விருந்தில் உரையாற்றிய அவர், மக்களுக்குச் சேவை செய்வதைவிடப் பதவிக்காக மோதிக்கொள்பவர்களுக்கு வாக்காளர்கள் வாய்ப்பளிக்கக் கூடாது என்றும், மாநிலத்தை நேர்மையோடும் ஊழல் இன்றியும் வழிநடத்தி வரும் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் தலைமையிலான பக்காத்தான் கூட்டணிக்கு மீண்டும் மக்கள் ஆணையளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், தேர்தலின் போது சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும் இனவாதப் பரப்புரைகளைக் சாடிய அவர், அனைத்து இன மக்களுக்கும் நீதி வழங்கும் வகையில் வீடமைப்புத் திட்டங்கள், அரசு ஊழியர்களுக்கான சம்பள சீரமைப்பு மற்றும் பொருளாதார உதவிகளை ஒற்றுமை அரசாங்கம் வழங்கி வருவதாக உறுதியளித்தார்.

வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பக்காத்தான் கூட்டணி அனைத்து 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.





















