வருட இறுதிக்குள் Price Catcher செயலியில் ஒரு லட்சம் புதிய பயனர்களை சேர்க்க இலக்கு – டத்தோ டாக்டர் ஃபுசியா சாலே

கோலாலம்பூர்,

உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) உருவாக்கிய Price Catcher செயலியில், இவ்வாண்டு இறுதிக்குள் குறைந்தது ஒரு லட்சம் புதிய பயனர்களைச் சேர்க்கும் இலக்கை அமைச்சு நிர்ணயித்துள்ளதாக, உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஃபுசியா சாலே தெரிவித்துள்ளார்.

தற்போது 5,52,000-க்கும் மேற்பட்டோர் இச்செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பொருள்களின் விலைகளை ஒப்பிடுவதற்கும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கும்போது நுகர்வோர் சிறந்த முடிவுகளை எடுக்க உதவுவதிலும் Price Catcher பயனுள்ள தளமாக இருப்பதாக அவர் விளக்கினார்.

“இந்த பயன்பாடு குறித்த விழிப்புணர்வை அதிகரித்து, நமக்கான இலக்கை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது,” என துணை அமைச்சர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், மொத்தப் பதிவுகளில் 62% பேரே Price Catcher பயன்பாட்டைச் சீராகப் பயன்படுத்துவதாகவும், இது மக்களிடையே விழிப்புணர்வு குறைவைக் காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொருள்களின் விலை விவரங்களை உடனுக்குடன் நுகர்வோருக்குத் தரும் நோக்கில் 2019-இல் அறிமுகப்படுத்தப்பட்ட Price Catcher செயலியை, மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை KPDN உறுதியாக முன்னெடுத்து வருவதாக டத்தோ டாக்டர் ஃபுசியா சாலே உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here