RM4 லட்சத்திற்கும் மேலான இழப்பீடு செலுத்தாத வழக்கில், கமாருல் ஜமானுக்கு எதிராக திவால் அறிவிப்பு செய்யுமாறு வழக்கு தாக்கல் செய்தார் ஹன்னா யோ

கோலாலம்பூர்:

சிகாம்புட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா யோ, எட்டு ஆண்டுகளுக்கு முன் தன்னை அவதூறாக பேசிய வழக்கில், உயர் நீதிமன்றம் விதித்த RM4 லட்சம் இழப்பீடும் RM80,000 வழக்கு செலவுகளும் செலுத்தாததால், உத்தர மலேசியா பல்கலைக்கழக (UUM) விரிவுரையாளர் டாக்டர் கமாருல் ஜமான் யூசோப்பிற்கு எதிராக திவால் அறிவிப்பை வெளியிடுமாறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

ஹன்னா யோவின் வழக்கறிஞர் சங்கீத் கௌர் தோ தெரிவித்ததாவது, இந்த அறிவிப்பு கடந்த ஜூலை 9ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. “கமாருல் ஜமான், மே 30 அன்று உயர் நீதிமன்றம் விதித்த RM4 லட்சம் இழப்பீடும் RM80,000 செலவுகளும் செலுத்தாததால், அவருக்கு எதிராக திவால் அறிவிப்பை வெளியிடுவதற்குரிய நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம். அவருக்கு நேரடியாக அறிவிப்பை வழங்க முடியாததால், ஜூலை 29ஆம் தேதி நீதிமன்றத்தில் இருந்து பத்திரிகை விளம்பரங்கள் உள்ளிட்ட மாற்று வழிகளின் மூலம் அறிவிக்க உத்தரவு பெற்றிருக்கிறோம்,” என்றார்.

இதற்கிடையில், கமாருல் ஜமான், மே 30 தீர்ப்பை நிறுத்துமாறு நீதிமன்றத்திடம் விண்ணப்பித்துள்ளதாக சங்கீத் கூறினார். அவர் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், அந்த நிறுத்துமாறு அவர் கோரிய மனு ஆகஸ்ட் 28 அன்று விசாரணைக்கு வரும். ஆனால், நிறுத்தல் உத்தரவு வழங்கப்படும்வரை ஹன்னா யோ, நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த உரிமை பெற்றுள்ளார் என்று சொன்னார்.

கடந்த மே 30 அன்று, நீதிபதி டத்தோ அலிசா சுலைமான், ஹன்னா யோ தரப்பில் தீர்ப்பு வழங்கி, கமாருல் ஜமான் எட்டு ஆண்டுகளுக்கு முன் கூறிய அவதூறு குறிப்புகளுக்காக RM4 லட்சம் இழப்பீடு செலுத்த உத்தரவிட்டார். மேலும், ஹன்னாவிற்கு வழக்கு தொடரும் உரிமை இல்லை என்ற கமாருலின் வாதத்திற்கு எந்தச் சட்ட ஆதாரமும் இல்லை என நீதிபதி கூறினார்.

இந்த அவதூறு வழக்கு 2022ஆம் ஆண்டு தொடரப்பட்டது. இது, 2017 மே 10 முதல் மே 17 வரையிலான காலத்தில், கமாருல் ஜமான் தனது பேஸ்புக் பக்கத்தில் ஹன்னாவுக்கு மதமாற்றும் நோக்கம் உண்டு என்றும், தனது அரசியல் தளத்தை கிறிஸ்தவ மதத்தை முன்னேற்றப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டிய பதிவுகளை வெளியிட்டதை காரணமாக காட்டி அவர் விமர்ச்சித்திருந்தார். மேலும் அவர் ஹன்னாவின் சுயசரிதை Becoming Hannah: A Personal Journey நூலை மேற்கோள் காட்டி, மலேசியாவை கிறிஸ்தவ நாடாக மாற்ற விரும்புகிறார் எனவும் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here