கோலாலம்பூர்:
உலகின் மிகப் பெரிய மலர்களில் ஒன்றான ராஃபிள்ஸியா மலரின் பெயரை மாற்ற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.
இந்த மலர் தென்கிழக்காசியாவில் காணப்படும் அரிய இனமாகும். தற்போது “ராஃபிள்ஸியா” என்ற பெயர், நவீன சிங்கப்பூரை நிறுவிய பிரிட்டிஷ் ஆட்சியாளர் சார் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸின் பெயரிலிருந்து வந்தது.
காலனித்துவ பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் இந்த பெயரை மாற்றி, மலேசியாவின் அடையாளத்துக்கு ஏற்ப புதிய பெயர் வழங்க வேண்டும் என பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அகமட் ஃபைசால் வான் அகமட் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், மலேசியா 1957-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற நிலையில், இன்றும் காலனித்துவ சின்னங்கள் தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், தேசிய மரபை வலுப்படுத்தும் வகையில் மலருக்கு பொருத்தமான புதிய பெயர் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.





















