பந்திங், ஜாலான் சுல்தான் சுலைமான் ஷாவில் இன்று அதிகாலை, கார் சறுக்கி பள்ளத்தில் மோதியதில் மூன்று பேர் இறந்ததோடு மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறுகையில், விபத்து குறித்து அதிகாலை 3.56 மணிக்கு துறைக்கு தகவல் கிடைத்தது. விபத்தில் சிக்கிய அனைவரும் மலேசியர்களாவர்.
அதைத் தொடர்ந்து, பந்திங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு அவர்கள் ஒன்பது நிமிடங்கள் கழித்து சம்பவ இடத்தை சென்றடைந்திருந்தனர். காரில் ஆறு பேர் இருந்தனர், அவர்கள் அதிகாலை 4.20 மணி முதல் அதிகாலை 5.15 மணி வரை இடிபாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அவர்களில் மூன்று பேர் இறந்த வேளையில் மற்ற மூவருக்கு தலை, உடல், கால்களில் காயம் ஏற்பட்டது, மேலும் சிகிச்சைக்காக பந்திங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.








