திரெங்கானுவில் நடந்த RXZ நிகழ்வில் நான்கு உயிரிழப்புகள் பதிவு

கோலா நேருஸ்:

திரெங்கானுவில் நடைபெற்ற RXZ Members 7.0, 2025 நிகழ்வில் பங்கேற்ற நான்கு பேர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை (JSPT) இயக்குநர் டத்தோ ஸ்ரீ யூஸ்ரி ஹசன் பாஸ்ரி தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பிருந்தே இன்றைய தினம் வரை மொத்தம் நான்கு மரண விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், பங்கேற்பாளர்கள் வீடு திரும்பும் போது மிகுந்த பாதுகாப்பை முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

“எனது அறிவுரை, குழுவாகவே பயணியுங்கள். நீங்கள் சோர்வாகவோ தூக்கமாகவோ இருந்தால், குறிப்பிட்ட ஓய்வு மையங்களில் நிறுத்திக் கொள்ளுங்கள். உயிருக்கு ஆபத்தான ‘சூப்பர்மேன்’ போன்ற ஆபத்தான சாகசங்களைத் தவிர்க்கவும்,” என RXZ நிகழ்வை காங்க் படாக் மோட்டார் சர்க்யூட்டில் இன்று தொடங்கி வைத்த பிறகு அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும், போலீசார் இந்த நிகழ்வின் போது கடுமையான அமலாக்கத்தினை விட, விழிப்புணர்வு மற்றும் பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டல் அளிப்பதில் அதிக கவனம் செலுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் திரெங்கானு மாநில காவல் துறைத் தலைவர் டத்தோக் மொஹ்த் கைரி கைருடின் கூறுகையில், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு எந்த வித அபராதங்களும் விதிக்கப்படவில்லை என்றும், பொதுமக்களிடமிருந்து எந்த வித புகார்களும் பெறப்படவில்லை என்றும் கூறினார்.

“இந்த ஆண்டு அதிகமான பங்கேற்பாளர்கள் இருந்த போதிலும், எந்தவித பிரச்சினைகளோ அல்லது ஒழுங்கு மீறல்கள் தொடர்பான புகார்களோ பதிவு செய்யப்படவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here