அடுத்தடுத்து சர்ச்சை; திரெட்ஸ் சமூக வலைதளத்தை மூடுகிறது மேத்தா!

துருக்கியில் திரெட்ஸ் சமூக வலைதளத்தை வரும் 29ம் தேதி முதல் மூடுவதாக மேத்தா நிறுவனம் அறிவித்துள்ளது.

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மேத்தா, ட்விட்டர் (தற்போது எக்ஸ்), எலான் மஸ்க் வசம் மாறிய சமயத்தில், அதற்கு போட்டியாக அதேபோன்ற செயல்பாடுகளை கொண்ட ‘திரெட்ஸ்’ என்ற புதிய சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் எக்ஸ் தளத்துக்கு திரெட்ஸ் பெரிய அளவில் சவால் அளிக்காவிட்டாலும் அதன் செயல்பாடு தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் திரெட்ஸ் சமூக வலைதளம் துருக்கியில் செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

திரெட்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் இடையே தரவுப் பகிர்வு முறை, துருக்கி நாட்டின் சட்டங்களை மீறுவதாகவும், சீரமைக்கமுடியாத பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் துருக்கி அரசு சார்பில் மேத்தா நிறுவனத்துக்கு கடந்த மாதம் தகவல் தெரிவித்திருந்தது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம், மேத்தா நிறுவனம், சட்ட விதிகளுக்கு இணங்கும் வரை தினமும் 4.8 மில்லியன் லிரா (1,48,000 அமெரிக்க டாலர்) அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்த அபராதமானது கடந்த டிசம்பரின் நடுப்பகுதியில் இருந்து பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் ஆகியவற்றிலிருந்து தரவுகளை இணைப்பதன் மூலம் மேத்தா துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறது என்றும், இது போட்டியாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது என்றும், துருக்கி தொழில்நுட்ப விவகாரங்களை கையாளும் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 29ம் தேதியிலிருந்து துருக்கியில் திரெட்ஸ் தற்காலிகமாக இயங்காது என மேத்தா அறிவித்துள்ளது.

திரெட்ஸ் தவிர மற்ற வலைதளங்களான வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் எந்த பாதிப்புமின்றி தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும், திரெட்ஸ் வலைதளத்துக்காக மேத்தா நிறுவனம் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here