கர்ப்பிணி ஊழியர்களுக்கு 22 வாரங்கள் கடந்தவுடன் சீக்கிரமாக வீடு திரும்ப அனுமதி – சுகாதார அமைச்சர்

    கோலாலம்பூர்:

    22 வாரங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட கர்ப்பிணி ஊழியர்களை சீக்கிரமாக வீடு திரும்புவதில் முதலாளிகள் தடையிடக்கூடாது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சுல்கிப்லி அமாட் வலியுறுத்தினார்.

    கர்ப்பிணி ஊழியர்கள், அவர்கள் நிரந்தர பணியாளர்களாக இருந்தாலும், தாதியர்களாக இருந்தாலும், அல்லது MySTEP உள்ளிட்ட ஒப்பந்த அடிப்படையிலானவர்களாக இருந்தாலும், 22 வாரங்களை எட்டியதும் விரைவில் வீடு திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும்.

    “இதற்கான பொது சேவைத் துறை சுற்றறிக்கையை அனைத்து சுகாதார வசதி நிர்வாகங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பல்வேறு பணிச்சுமைகள் காரணமாக சவால்கள் இருந்தாலும், துறைத் தலைவர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், தற்போதைய நிலையான நடைமுறைகளுக்கு முரணான எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது,” என்று அவர் தெரிவித்தார்.

    சுகாதார வசதிகள் பல்வேறு அழுத்தங்களை எதிர்கொள்கின்றன என்பதை புரிந்துகொள்கிறேன் என்றார் அவர். “ஆனால் அது விதிகளை மீறுவதற்கான சாக்காக இருக்க முடியாது. அனைத்து தரப்பினரும் நிர்ணயிக்கப்பட்ட அறிவுறுத்தல்களை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here