கோலாலம்பூர்:
ஜப்பானைச் சேர்ந்த கோகிச்சி அக்குசாவா (Kokichi Akuzawa) என்ற 102 வயது முதியவர், ஃபூஜி (Mount Fuji) மலையை ஏறி, கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
அவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில், இதய செயலிழப்பு (heart failure) ஏற்பட்ட போதிலும், இந்தக் கடினமான இலக்கை அடைந்துள்ளார்.
முன்னதாக, 96 வயதில் ஃபூஜி மலையை ஏறியுள்ள அவர், இந்த முறை, கடல் மட்டத்திலிருந்து 3,776 மீட்டர் உயரம் கொண்ட அந்த மலையை, மூன்று நாட்களில் ஏறி முடித்தார்.
வழியில் குளிர், பலத்த காற்று, உயர அழுத்தம் போன்ற சவால்களை அவர் எதிர்கொண்டார்.
சவால்களை வென்ற முதியவர்
ஒன்பதாவது நிலையத்தை நெருங்கியபோது, கோகிச்சி மிகவும் சிரமப்பட்டார். அப்போது, அவரது 70 வயது மகள் கொடுத்த ஊக்கம், ஆகஸ்ட் 5-ஆம் தேதி அவரை உச்சிக்குச் செல்லத் தூண்டியது.
சிகரத்தை அடைந்த பிறகு, அங்குள்ள ஆலயத்தின் வருகையாளர் புத்தகத்தில் அவர் கையெழுத்திட்டார். தனது சாதனையைப் பற்றிப் பேசிய கோகிச்சி, தனக்குக் கிடைத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன், “இனிமேல் ஃபூஜி மலையை ஏறவே மாட்டேன்” என்று வேடிக்கையாகக் கூறியவர், எதிர்காலத்தில் தனது மனதை மாற்றிக்கொள்ளக்கூடும் என்றும் சூசகமாகக் குறிப்பிட்டார்.





















