கோலாலம்பூர்:
ஒரு உயர் தொழில்நுட்ப மோசடி கும்பல், வெறும் ஸ்மார்ட்போன், “VIP111” என்ற இரகசியக் குறியீட்டைப் பயன்படுத்தி, மேபேங்கிற்கு (Maybank) RM1.7 மில்லியனுக்கும் மேலான இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசடி, மே 31 முதல் ஜூன் 14 வரையிலான இரண்டு வாரங்களில், 154 போலி பரிவர்த்தனைகள் மூலம் நடந்துள்ளது.
ஒரு வாடிக்கையாளர் சந்தேகத்திற்குரிய நடவடிக்கையைக் கண்டறிந்தபோது, இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
இது, மேபேங்கின் மின்னியல் தரவு கைப்பற்றும் (Electronic Data Capture – EDC) இயந்திரங்கள், எப்படி ஆஃப்லைன் முறையில் இயங்கும்படி வஞ்சிக்கப்பட்டு, போலியான கொள்முதல்கள் உண்மையானவை போலத் தோன்றின என்பதை வெளிப்படுத்தியது.
இந்த மோசடி தொடர்பாக, சோங் யின் ஹொங் (Chong Yin Hong – 41), சோங் லி ஷியான் (Chong Li Shian – 38) ஆகிய இரண்டு பெண்கள், இன்று செஸன்ஸ் நீதிமன்றத்தில் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
1997-ஆம் ஆண்டு கணினி குற்றச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு, தலா RM30,000 ரிங்கிட் அபராதம் அல்லது அபராதம் செலுத்தத் தவறினால், நான்கு மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் ஒரு பெரிய கும்பலின் ஒரு பகுதி என்று புலனாய்வு அதிகாரிகள் நம்புகின்றனர். எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.




















