கோலாலம்பூர்:
உலகளாவிய மோசடிக்கு எதிரான கூட்டணி (GASA)வின் அறிக்கையின்படி, மலேசியாவில் இணையவழி மோசடிகள் பல தலைமுறை நெருக்கடியாக மாறியுள்ளன.
இதில் 7 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஐந்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், மேலும் கடந்த ஆண்டு குடும்பங்கள் சுமார் RM40.1 பில்லியன் ரிங்கிட் தொகையை இழந்துள்ளன.
இந்த ஆய்வில் நிதி இழப்புகள் மட்டுமன்றி, மனநல பாதிப்புகளும் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 62% பேர் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், பாதிக்கும் மேற்பட்டோர் மனநல பாதிப்புகளை அனுபவித்துள்ளனர். இதனால் குடும்பங்களில் கடனும் பதற்றமும் அதிகரித்துள்ளது.
இதனிடையே இந்த மோசடி கும்பல்கள், WeChat, TikTok, Instagram போன்ற தளங்கள் மூலம் சிறுவர்களை குறிவைத்து, வங்கிப் பண பரிவர்த்தனைகள், டிஜிட்டல் பணப்பைகள் வழியாக பணத்தை திருடுவதினால், பணத்தை மீட்பது மிகவும் கடினமான செயலாக மாறிவிட்டது.
இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களில் வெறும் 13% பேர் மட்டுமே தங்கள் பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி, 74% பெரியவர்கள் மோசடிகளை எளிதாகக் கண்டறிய முடியும் என்று நம்பினாலும், இளம் தலைமுறையினரும், படித்தவர்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே தான், இது மோசடி தடுப்பு குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதைக் காட்டுகிறது. இந்த ஆய்வு, மலேசியாவின் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாக்க, வலுவான தடுப்பு கல்வி, கொள்கை தலையீடுகள் , குறிப்பிட்ட தளங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.





















