கோலாலம்பூர்:
மலேசியாவின் கலப்பு இரட்டையர் பேட்மிண்டன் ஜோடி சென் டாங் ஜீ மற்றும் தூ ஈ வெய், உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வரலாறு படைத்ததற்காக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர்கள் மலேசியாவின் முதல்- கலப்பு இரட்டையர் உலக சாம்பியன்கள் ஆனது குறித்து பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
“டாங் ஜீ – ஈ வெய் ஜோடியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, நம் நாட்டிற்கு பொற்கால அத்தியாயம். இந்தப் பட்டம், மலேசிய விளையாட்டுத் துறைக்கும், இளைய தலைமுறைக்கும் மிகப் பெரிய உந்துதலை அளிக்கும்,” என்று அன்வார் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.
இந்த வெற்றி, நாட்டிற்கு மெர்டேக்கா தினப் பரிசாகவும், மலேசிய பேட்மிண்டனுக்கு பெருமைக்குரிய திருப்புமுனையாகவும் அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
டாங் ஜீ – ஈ வெய் ஜோடி, இறுதிப் போட்டியில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வரலாற்றில் முதன்முறையாக மலேசியாவுக்கு உலக கலப்பு இரட்டையர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.





















