கிளாந்தானில் முஸ்லீம்கள் மட்டும் நிலம் பெறலாம் – பாஸ் முடிவு பெரும் எதிர்ப்பு

கோத்தா பாரு:

கிளாந்தான் மாநிலம் முன்னேற்றம் அடைந்த மாநிலமாக இருக்க வேண்டுமெனில், அதன் நில உரிமை “மண்ணின் மைந்தர்களான இஸ்லாமியர்களுக்கே” மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று பாஸ் கட்சியின் உதவித் தலைவர் மற்றும் கிளாந்தான் மாநில துணை மந்திரி பெசார் டத்தோ’ ஸ்ரீ அமர் முகமட் அமர் அப்துல்லா வலியுறுத்தினார்.

“கிளாந்தானின் வரலாற்றில் இஸ்லாமியர்களே முக்கிய பங்காற்றி வந்துள்ளனர். ஆகையால், மாநிலத்தின் நில உரிமையைப் பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கே உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், கிளாந்தான் மாநிலம் வளர்ச்சி அடையக் கூடிய திறன் கொண்டது என்பதை சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ ஒருகாலத்தில் கிளாந்தான் மாநில முன்னாள் மந்திரி பெசார் துவான் குரு டான் ஸ்ரீ நிக் அப்துல் அசிஸ் நிக் மாத் அவர்களிடம் வெளிப்படையாகச் சொன்னதாகவும் அமர் முக்த் அமர் தெரிவித்துள்ளார்.

“சிங்கப்பூர் இன்று பெற்றுள்ள முன்னேற்றத்திற்கு இணையான பெருமையை கிளாந்தானும் அடையக்கூடும். அதற்குக் காரணம், இங்கு வாழும் இஸ்லாமியர்கள் மாநிலத்தின் சொத்தான நிலத்தை உறுதியாகக் காத்து வருவதே,” என்று அவர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது: “கிளாந்தானின் பெரும்பாலான நிலங்கள் இஸ்லாமியர்களுக்கே சொந்தமானவையாக இருக்க வேண்டும் என்ற கொள்கையில் மாநில அரசு உறுதியாக உள்ளது.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here