பெந்தோங் இராணுவ முகாமில் தாக்குதலுக்குள்ளான சிப்பாய் மரணம்: வழக்கு கொலை வழக்காக மாற்றம்!

பெந்தோங், ஏப்ரல் 11:

பெந்தோங் இராணுவ முகாமில் சக வீரரால் தாக்கப்பட்ட பிரபெட் (Prebet) முஹமட் அமிருல் ராசிக் ரோசாஃபிண்டி (Muhammad Amirul Raziq Rosafindi) என்ற இராணுவ சிப்பாய், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் மீதான தாக்குதல் வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 30-ஆம் தேதி, பெந்தோங் முகாமில் உள்ள 25-வது ராயல் மலாய் ரெஜிமென்ட் (25 RAMD) பிரிவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஆயுதக் கிடங்கு சுத்தம் செய்யும் பணியில் திருப்தியடையாத ஒரு கீழ்நிலை அதிகாரி (NCO), ஏழு இராணுவ வீரர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

தாக்குதலின் போது, முகத்திலும் வயிற்றிலும் பலமாக அடிபட்ட பிரபெட் முஹமட் அமிருல் ராசிக் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் முகாமில் உள்ள மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று, பின்னர் பெந்தோங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை 9:34 மணியளவில் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து பெந்தோங் மாவட்ட காவல் துறைத் தலைவர் சுப்ரிடெண்டன்ட் சாய்காம் முகமட் கஹார் (Supt Zaiham Mohd Kahar) விடுத்துள்ள அறிக்கையில்: ஏற்கனவே தண்டனைச் சட்டத்தின் பிரிவு 325-ன் கீழ் (கடுமையான காயத்தை ஏற்படுத்தியது) பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு, தற்போது பிரிவு 302-ன் கீழ் (கொலை) மாற்றப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் முன்பு பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களை மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர். தேவைப்பட்டால், கூடுதல் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படும்.

தாக்குதலுக்கு உள்ளான மற்ற ஆறு வீரர்களுக்குப் பெரிய அளவில் காயங்கள் இல்லை என்றாலும், அவர்கள் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் எந்தவிதமான சமரசமும் இருக்காது என்றும், சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here