டிக்டாக்கைத் தடைசெய்யும் சட்டத்துக்குக் கையெழுத்திடத் தயார் என்கிறார் பைடன்

வா‌ஷிங்டன்:

டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடைசெய்ய வழிவகுக்கும் சட்டத்தை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அங்கீகரித்துள்ளார்.

அச்சட்டம் செயல்படுத்தப்பட்டால் சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம், டிக்டாக் தளத்தின் உரிமையைக் கைவிட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அத்தளம் தடைசெய்யப்படக்கூடும்.

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரான குடியரசுக் கட்சியின் மைக் ஜான்சனும் அந்த சட்டத்துக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நாடாளுமன்றத்தில் அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டால் நான் கையெழத்திடுவேன்,” என்று பைடன் கூறினார். இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

பைடன் அங்கீகரிப்பதற்கு முன்பு டிக்டாக்கைத் தடைசெய்வதற்கான சட்டத்தை முன்வைப்பதில் இன்னும் வேலைப்பாடு இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கேரின் ‌ஷோ-பியேர் கூறியிருந்தார்.

குடியரசுக் கட்சியின் சார்பில் இவ்வாண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக எதிர்பார்க்கப்படும் டோனல்ட் டிரம்ப், முன்னதாக ட்ரூத் சோ‌ஷியல் எனும் தனக்குச் சொந்தமான சமூக ஊடகத்தில் டிக்டாக் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அத்தடை, ஃபேஸ்புக் தளத்துக்குச் சாதகமாக அமையும் என்பது அதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவி வகித்த காலத்தின் பிற்பகுதியில் டிக்டாக், வீசாட் ஆகிய தளங்களைத் தடைசெய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்து பின்னர் அதை மீட்டுக்கொண்டார்.

டிரம்ப்பின் நிலைப்பாடு, டிக்டாக்கைத் தடைசெய்வதற்கான சட்டம் குறித்த விவாதத்தில் சில சக்திவாய்ந்த குடியரசுக் கட்சியினரின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகவில்லை. ஜான்சன், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்றத் தலைவர் ஸ்டீவ் ஸ்கேலிஸ் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

டிக்டாக் பயனர்களின் தரவுகளை பைட்டான்ஸ் நிறுவனம், சீன அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்ளக்கூடும் என்று அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவும் மத்திய தொடர்புக் குழுவும் (எஃப்சிசி) எச்சரித்திருக்கின்றன. தான் அவ்வாறு செய்ததே இல்லை என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டாலும் அப்படி செய்யமாட்டோம் என்றும் டிக்டாக் கூறி வந்துள்ளது.

டிக்டாக் அவ்வாறு செய்ததற்கான ஆதாரத்தை அமெரிக்க அரசாங்கம் இதுவரை முன்வைக்கவில்லை.

அமெரிக்காவில் சுமார் 170 மில்லியன் டிக்டாக் பயனர்கள் இருப்பதாகக் கருத்தாய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here