கோலாலம்பூர்:
பொதுமக்கள் அளித்த புகார்களைத் தொடர்ந்து, புக்கிட் பிந்தாங், ஜாலான் பெடாரா, பகுதியில் குடி நுழைவு இலாகா மேற்கொண்ட சோதனையில், இணைய சூதாட்டம் உட்பட, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
மூன்று மணி நேரம் நடைபெற்ற, இந்த ‘ஓப் பெலாஞ்சா’ (Op Belanja) நடவடிக்கையின்போது, 2,400-க்கும் மேற்பட்டோர் சோதனை செய்யப்பட்டனர்.
இதில், அதிக காலம் தங்கியிருந்து, செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாது, போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தியது போன்ற குற்றங்களுக்காக, 770 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்டவர்கள், பங்களாதேஷ், மியான்மார், நேபாளம், இந்தியா, இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும், அவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைக்காக குடி நுழைவு இலாக்காவினால் கொண்டு செல்லப்பட்டனர்.
இது மட்டுமின்றி, அதிகாரிகள், சிசிடிவி (CCTV) கண்காணிப்புடன் கூடிய, சூதாட்டக் கூடத்தையும் கண்டுபிடித்துள்ளனர். இதில், ஏழு வெளிநாட்டினர், சட்டவிரோதமாகச் சூதாட்டத்தில் ஈடுபட்டபோது, கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு எதிராக, குடிநுழைவுத் இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட, பொதுமக்கள் ஒத்துழைக்குமாறும் அது வலியுறுத்தியுள்ளது.
























