கோலாலம்பூர்:
22 மில்லியன் மலேசியர்களுக்கு, RM2 பில்லியன் மதிப்புள்ள, சும்பங்கன் அசாஸ் ரஹ்மா (Sumbangan Asas Rahmah – SARA) திட்டம், வாழ்க்கைச் செலவைக் குறைக்க உதவுவதுடன் உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கும், குறிப்பாக, சிறு சில்லறை வர்த்தகர்கள், உள்ளூர் விநியோகஸ்தர்களுக்கும் ஊக்கமளிக்கும் என, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு ரிங்கிட் செலவழிக்கும்போது, விநியோகச் சங்கிலி முழுவதும், RM2.43 ரிங்கிட் மதிப்பு உருவாகும். இது, விரைவான முதலீட்டுப் பணப்புழக்கம், உள்ளூர் வணிகங்களுக்கு, அதிக ஆர்டர்களை உருவாக்கும் என்று, கருவூலத் துணைப் பொதுச் செயலாளர் டத்தோ சம்சுரி அப்துல் அசிஸ் (Datuk Zamzuri Abdul Aziz) விளக்கினார்.
இந்தத் திட்டத்தில், 7,300-க்கும் மேற்பட்ட விற்பனை மையங்கள், இதில், 2,000 சிறு சில்லறை வர்த்தகர்கள் உட்பட, பங்கேற்கின்றன.
இந்த உதவியைப் பெறுபவர்கள், டிசம்பர் 31 வரை, தங்கள் கொள்முதல்களைத் திட்டமிடுமாறும், நெரிசல் நேரங்களைத் தவிர்க்குமாறும், கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தங்களுக்கு இந்த உதவித் தேவையில்லை என்றால், இந்தத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட பொருட்களை, நன்கொடையாக வழங்கலாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட RM100 ரிங்கிட் உதவித் தொகையைப் பயன்படுத்தி, அரிசி, சமையல் எண்ணெய் முதல், பள்ளிப் பொருட்கள் வரை, 14 வகைப் பொருட்களை வாங்கலாம்.























