கோலாலம்பூர்:
வனவிலங்குகள், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஜோகூர், கஹாங் (Kahang), மெர்சிங் (Mersing) இடையே உள்ள, கூட்டரசு சாலை எப்.டி 50-இல் (FT50), RM66 மில்லியன் செலவில், முதல் வனவிலங்குப் பாதை (wildlife crossing) அமைக்கப்படவுள்ளதாக, மாநில சுகாதார, சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் லிங் தியாங் சூன் (Ling Tiang Soon) தெரிவித்தார்.
இந்தத் திட்டம், 2028 பிப்ரவரிக்குள், நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 200 மீட்டர் நீளமுள்ள ஒரு மேம்பாலம், சாலை மேம்படுத்தல்கள் மற்றும் விலங்குகளுக்கு வழிகாட்டும் தாவரங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய இந்தத் திட்டம், வனவிலங்குகள் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்க உதவும்.
மைய வன பகுதியின் (Central Forest Spine) ஒரு பகுதியான இந்தச் சாலை, மலேசியப் புலி, யானைகள், டப்பீர்கள் (tapirs), சிறுத்தைகள் போன்ற விலங்குகளின், முக்கிய வாழ்விடமாக உள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட விபத்துகள், இந்தத் திட்டத்தின் அவசியத்தை எடுத்துரைக்கின்றன.
இந்த முயற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் சமநிலைப்படுத்துவதில், ஜோகூர் மாநிலத்தின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.




















