கொழும்பு,
இலங்கையர்கள் இன்று (07) இரவு அரிய விண்வெளி நிகழ்வான “பிளட் மூன்” எனப்படும் முழு சந்திர கிரகணத்தை காணும் அபூர்வ வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக கொழும்புப் பல்கலைக்கழக இயற்பியல் துறை மற்றும் வானியல், விண்வெளி அறிவியல் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இன்று இரவு 82 நிமிடங்களுக்கு சந்திரன் முழுவதுமாக பூமியின் நிழலில் மூழ்கி ஆழமான சிவப்பு நிறத்தில் மாறவுள்ளது. இவ்வருடத்திற்கான கடைசி முழு சந்திர கிரகணமாகும் இந்நிகழ்வு, உலக மக்கள் தொகையில் சுமார் 85% பேரால் காணக்கூடியதாகும். ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் தெளிவாகக் காணக்கூடிய நிலையில், இலங்கையர்களுக்கு மிகத் தெளிவான காட்சிகளை பார்க்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சூரியன் மற்றும் முழு நிலா இடையே பூமி வருவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்நேரத்தில் சந்திரன் பூமியின் நிழலுக்குள் நுழைந்து, முழுவதுமாக வெண்மை ஒளியிலிருந்து சிவப்பு நிறமடையும். வானம் மேகமில்லாமல் தெளிவாக இருந்தால், இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் இந்நிகழ்வை முழுமையாகக் காண முடியும்.
முக்கிய நேரங்கள் (இலங்கை நேரப்படி)
பிரகாசம் மங்கத் தொடங்கும் நேரம் – இரவு 8.58
பகுதி கிரகணம் தொடக்கம் – இரவு 9.57
முழு கிரகணம் தொடக்கம் – இரவு 11.01
அதிகபட்ச கிரகணம் – இரவு 11.42
முழு கிரகணம் முடிவு – அதிகாலை 12.22 (செப். 8)
பகுதி கிரகணம் முடிவு – அதிகாலை 1.26 (செப். 8)
பிரகாசம் மங்கல் முடிவு – அதிகாலை 2.25 (செப். 8)
மொத்தமாக 5 மணி 27 நிமிடங்கள் நீடிக்கும் இக்கிரகணத்தில், சந்திரன் சிவப்பாகக் காணப்படும் காலம் மட்டும் 1 மணி 22 நிமிடங்கள் இருக்கும்.
























