கடலூர்:
கடலூரில் உள்ள சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் செயல்படும் கிரிம்சன் ஆர்கானிக் ரசாயனத் தொழிற்சாலையில் திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் 70க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் போன்ற உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டனர்.
செப்டம்பர் 6ஆம் தேதி அதிகாலை தொழிற்சாலையில் பயங்கரச் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, புகை மற்றும் நச்சுவாயு பரவியது. காற்றில் பரவிய அந்த வாயுவால் மக்கள் உடனடியாக உடல்நலக் குறைபாடுகளை உணர்ந்தனர்.
இதையடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள், தொழிற்சாலை அலுவலகத்தையும் காவலாளர் அறையையும் சேதப்படுத்தினர். மேலும், இழப்பீடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் கடலூர் – சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், தொழிற்சாலையின் பாய்லருக்குச் செல்லும் குழாயில் இருந்த ‘கேஸ்கெட்’ திடீரென உடைந்ததே இந்த வாயுக் கசிவுக்குக் காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.





















