ஜோகூர் பாரு :
ஜோகூர் பாரு வட்டாரத்தில் கேபிள் திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் 16 வயது இடைநிலைப் பள்ளி மாணவர் உள்பட நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 16 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் ஒருவர் வெளிநாட்டவர் என்றும், மூவர் வேலை இல்லாதவர்கள் என்றும் ஜோகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை விடியற்காலை 5.15 மணியளவில் ஜாலான் சொங்கேட் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேக நபர்கள் கேபிள் திருடும் நடவடிக்கையை கண்டுபிடித்தனர். பின்னர், புரோட்டோன் வீரா காரில் தப்பிச் செல்ல முயன்ற அவர்களை போலீசார் ஜாலான் பூங்கா ராயாவில் மடக்கிப் பிடித்தனர்.
“கைது செய்யப்பட்ட 16 வயது இளைஞர் இன்னும் பள்ளியில் பயின்றுவருகிறார். இந்தக் கைது மூலம் ஜோகூர் பாரு வட்டாரத்தில் இதற்கு முன் நடந்த ஆறு கேபிள் திருட்டுச் சம்பவங்களுக்கு தீர்வு கிடைத்ததாக நாங்கள் நம்புகிறோம்,” என்று ரவூப் கூறினார்.
கும்பலிடமிருந்து திருடப்பட்ட கேபிள்கள் மற்றும் திருட்டில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கைதானவர்களில் மூவர் மெத்தம்பெத்தமின் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது சிறுநீர் சோதனையில் தெரியவந்ததோடு, இருவர் கேபிள் திருட்டு மற்றும் போதைப் பொருள் தொடர்பான குற்றப்பதிவுகளையும் கொண்டிருந்தனர்.
அனைத்து சந்தேக நபர்களும் தண்டனைச் சட்டம் பிரிவு 379, அபாயகர போதைப் பொருள் சட்டம் 1952 (பிரிவு 15(1)(ஏ)) மற்றும் குடிநுழைவுச் சட்டம் 1959/63 (பிரிவு 6(1)(சி)) கீழ் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.





















