ஜெய்ப்பூர்:
பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட செயற்கை மழை முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரின் ராம்நகர் பகுதியில், 15.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள ஏரிக்கு அருகே அணை கட்டப்பட்டது. இது ஜெய்ப்பூர் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. கடந்த 1982ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக இந்த ஏரியில் படகுப் போட்டிகள் நடத்தும் அளவுக்கு நீர் நிரம்பியிருந்தது.
ஆனால், காலத்துடனே நிலைமை தலைகீழாக மாறி, ஏரி மற்றும் அணை நீர் இல்லாமல் வறண்டுவிட்டன. இதற்குக் காரணமாக சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் நீர் கால்வாய்களின் மூடல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. 1999ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
அதிகாலை நடைபெற்ற ஆய்வில் மாநில அரசுக்கு நம்பிக்கை தரும் முடிவுகள் வெளியாகியுள்ளன. ராம்நகர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் செயற்கை மழை பெய்ய முயற்சியில் ஒரு அளவுக்கு வெற்றி கிடைத்தது. பின்னர், தனியார் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், டிரோன்கள் மூலம் விதைகள் தூவி செயற்கை மழை உருவாக்கப்பட்டு, அதில் ‘AI’ தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகித்தது.
‘ஏஐ’ தொழில்நுட்பத்தின் உதவியுடன், எந்த அளவிலான வேதிப்பொருள்களை எவ்வளவு அளவில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் கணக்கிடப்பட்டது.
இதையடுத்து, ராஜஸ்தான் மாநில வேளாண் அமைச்சர் மருத்துவர் கிரோடி லால் மீனா முன்னிலையில், 2,600 அடி உயரத்தில் டிரோன்கள் பறக்கவிட்டு, செயற்கை மழைக்கான விதைகள் தூவப்பட்டன. முதலாவது முயற்சியிலேயே ராம்நகர் ஏரி அணைக்கு அருகிலுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 0.08 சென்டிமீட்டர் மழை பெய்தது, இது செயற்கை மழை சாத்தியம் என்பதைக் காட்டுகிறது என அமைச்சர் கூறினார்.





















