2030 நிலையான மேம்பாட்டு இலக்கு உறுதியான சீர்திருத்தங்கள் அவசியம்-அமைச்சர் ஙா கோர் மிங்

கோலாலம்பூர்,

பதின்மூன்றாவது மலேசியத் திட்டத்தின் கீழ் உறுதியான சீர்திருத்தங்கள் வழி மலேசியாவின் நிலையான இலக்குகள் 2030, புதிய நகர்மயத் திட்டம் ஆகியவற்றைத் தீரத்துடன் முன்னெடுத்துச் செல்லும் தன்னுடைய கடப்பாட்டை வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு நேற்று மறு உறுதிப்படுத்தியது.

மலேசியர்களுக்கு வாங்கும் சக்திக்குட்பட்ட நிலையான வீடுகள், பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றில் மடானி அரசாங்கத்தின் வியூகத்தை மையமாகக் கொண்டு வீடமைப்பு சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படும் என்று வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.

அதேசமயம் 2030ஆம் ஆண்டுக்குள் கைவிடப்படும் வீடமைப்புத் திட்டங்களை முழுமையாகத் துடைத்தொழிக்கும் நோக்கத்துடன் 13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டி முடித்த பின் விற்பனை செய்யும் நடைமுறையை அனுசரிக்கும் மேம்பாட்டாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிமுகம் செய்வதற்கும் அரசாங்கம் தயாராக இருக்கிறது என்ற தகவலை அவர் பகிர்ந்தார்.

வீடுகளைக் கட்டி அதன்பின் விற்கும் திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தும் மேம்பாட்டாளர்கள் அரசாங்கத்தின் சன்மானங்களைப் பெறுவர். இதன்வழி வீடு வாங்குவோர் பாதுகாக்கப்படுகின்றனர் மேலும் சொத்துத் துறைகளில் வெளிப்படையான தன்மை அதிகரிக்கும். மேலும் நம்முடைய மக்களுக்கு சக்திக்குட்பட்ட மேலும் அதிகமான வீடுகளை வழங்குவதற்கும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இது ஒரு முன்னோடியாகத் திகழும் என்று இங்கு 2025 நகர்ப்புற பொறியியல் கருத்தரங்கில் நிகழ்த்திய முக்கிய உரையில் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் மலேசியாவின் திடக்கழிவு மேலாண்மை நவீனப்படுத்தப்பட்டு தூய்மைப்பணிகளில் சீர்திருத்தங்களை அமல்படுத்தும். அதற்கான நவீன வசதிகள், மின்சாரத் தூய்மை, வாகனங்கள், குப்பைப் போடுவதற்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை ஆகியவை அமல்படுத்தப்படும்.
2030 மலேசியாவின் நிலையான மேம்பாட்டு இலக்குகளானது பொறுப்புமிக்க கொள்முதலை நடைமுறைப்படுத்தி குடிமை உணர்வில் பெருமை கொள்ளும் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். அதேபோல் தூய்மையான, சுகாதாரமிக்க சமூகங்களை உருவாக்கும் பொறுப்புகளும் பகிர்ந்து கொள்ளப்படும் என்று ஙா கோர் மிங் தெரிவித்தார்.

வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சின் அனைத்து சீர்திருத்தங்களும் மலேசியப் பசுமை நிர்மாணிப்புக் குறியீட்டில் இணைக்கப்படும். இது பருவநிலை மாற்றங்கள், எரிசக்தித் திறன், நிர்மாணிப்புகளில் சுற்றுச்சூழலை நேசிக்கும் அம்சங்கள் இடம்பெறுவது ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தத் திட்டங்களானது நகர்ப்புற உருமாற்றம், வீடமைப்பு சீர்திருத்தங்களை ஒன்றிணைப்பது, தூய்மை, பாதுகாப்புத் தரங்கள் நிலைத்தன்மை ஆகியவற்றில் ஒரு முழுமையான அணுகலைப் பிரதிபலிக்கும்.

நிலையான மேம்பாட்டு இலக்குகள் 2030, புதிய நகர்மயத் திட்டங்கள் ஆகியவற்றில் நாம் கொண்டுள்ள கடப்பாடுகள் மலேசியாவின் துரித நகர் மைய வளர்ச்சியை உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

நகர்ப்புற பொறியியல்துறை எதிர்காலம் என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கானது பொறியியலாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், மேம்பாட்டாளர்கள், நகர்ப்புறத் திட்டமிடல் அதிகாரிகள் ஆகியோரை ஒன்றிணைப்பதாக விளங்குகிறது. இவர்கள் அனைவரும் வியூகங்களைப் பரிமாற்றம் செய்து கொண்டு மலேசியாவின் நகரப்புற எதிர்காலத்தைப் பலப்படுத்துவர். இதன்வழி மலேசியாவின் நிலையான மேம்பாட்டு இலக்குகள், 2030 திட்டத்தை அமல்படுத்துவதில் இப்பிராந்தியத்தின் தலைமையாக மலேசியா திகழும் என்று ஙா கோர் மிங் கூறினார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here