அரசியல் தலைவர்களைக் குறிவைத்து ‘AI’ பாலியல் காணொளிகள்- போலீஸ் வருத்தம்

கோலாலம்பூர்:

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளை குறிவைத்து, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் போலியான பாலியல் காணொளிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அந்தக் காணொளிகளை பயன்படுத்தி அரசியல் தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதுடன், பெரிய தொகை பணமும் மோசடிக் குழுக்களால் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசியக் காவல்துறை தலைமை அதிகாரி முகமட் இஸ்மாயில், இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

“AI காணொளிகளைச் சேர்ந்ததாக அதிகாரப்பூர்வமாக இதுவரை நான்கு புகார்கள் மட்டுமே எங்களிடம் வந்துள்ளன. இணைய மிரட்டல்களைப் பற்றிய பத்து புகார்கள் இருந்தாலும், அவற்றில் நான்கே பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முன்னேற்றத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிப்போம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், “இந்தக் காணொளிகளுக்குப் பின்னால் உள்ள நோக்கம் குறித்து விசாரித்து வருகிறோம். பொதுவாக இத்தகைய குற்றங்கள் பெரும்பாலும் பண வசூலிக்கவே செய்யப்படுகின்றன,” என்றும் அவர் கூறினார்.

முன்னாள் பொருளியல் அமைச்சர் ரஃபிசி ரம்லியும் இந்த போலி காணொளிகளால் பாதிக்கப்பட்டுள்ளார். மோசடிக் குழு தயாரித்த ஏஐ காணொளியில், அவர் மற்றொருவருடன் பாலியல் உறவில் ஈடுபடுவது போல காட்டப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு அவரிடம் 100,000 அமெரிக்க டாலர் பணம் கோரியும் மிரட்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் அந்தக் காணொளி அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோன்ற மிரட்டல் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென்னுக்கும் வந்துள்ளது.

மேலும், தகவல் தொடர்பு அமைச்சர், இளையர் மற்றும் விளையாட்டு அமைச்சின் துணை அமைச்சர் உள்ளிட்ட 10 அரசியல் தலைவர்கள் AI மூலம் உருவாக்கப்பட்ட போலி பாலியல் காணொளிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here