காக்கும் கடவுளாக திகழக்கூடிய மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாக திகழக்கூடியது தான் புரட்டாசி மாதம். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு சனிக்கிழமையும் திருப்பதி ஏழுமலையானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்யும் பக்தர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த மாதம் முழுவதும் அசைவத்தை தவிர்த்துவிட்டு சுத்த சைவத்திலிருந்து பெருமாளை நினைத்து திருப்பதிக்கு சென்று வழிபாடு செய்யும் பக்தர்களும் இருக்கிறார்கள்.
ஒவ்வொருவருடைய வழிபாட்டு முறையும் வெவ்வேறாக இருந்தாலும் பெருமாளின் அருளை பெற வேண்டும் என்பது மட்டுமே பொதுவான ஒன்றாக அமையும். அப்படி பெருமாளின் அருளை பெறுவதற்கு புரட்டாசி முதல்நாள் செய்ய வேண்டிய செயல்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் அருளைப் பெற புரட்டாசி மாதம் ஆரம்பித்த உடனேயே பலரும் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள்.. அதிலும் புரட்டாசி சனிக்கிழமை திருப்பதி ஏழுமலையானை வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். ஒருவேளை திருப்பதிக்கு செல்ல இயலவில்லை என்றாலும் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யும் வழக்கத்தையும் வைத்திருப்பார்கள்.
இப்படி வழிபாடு செய்வதன் மூலம் பெருமாளின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். அதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீரும். மேலும் புரட்டாசி மாதம் மிகவும் சிறப்பு மிகுந்த மாதமாக அமைவதற்கும் பெருமாளின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் சில பொருட்களை புரட்டாசி மாதத்தின் முதல் நாள் அன்று சில பொருட்களை வாங்க வேண்டும்.
புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமாளுக்கு உரிய மாதம் தான். பெருமாளுக்கு உகந்ததாக திகழ்வதுதான் நாமம். நாமம் போடுவதற்காக பயன்படுத்தக்கூடிய நாமக்கட்டியை புரட்டாசி மாதத்தின் முதல் நாள் அன்று வாங்க வேண்டும். அதோடு செந்தூரத்தையும் சேர்த்து வாங்க வேண்டும். இதை வாங்கி வந்து பூஜையில் வைப்பதன் மூலம் பெருமாளை வீட்டிற்கு அழைத்து வந்தார் போல் அர்த்தம் உண்டாகும்.
அடுத்ததாக பெருமாளுக்கு உகந்த துளசி மணி மாலையை வாங்கி வந்து அதை பன்னீரில் சுத்தம் செய்து வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்திற்கோ சிலைகோ சாற்ற வேண்டும். இப்படி செய்வதன் மூலம் துளசித் தாயின் அருளையும் நம்மால் பெற முடியும்.
அடுத்ததாக புரட்டாசி மாதத்தின் முதல் நாளும் சரி புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு சனிக்கிழமையும் சரி மகாலட்சுமி தாயார் வீற்றிருக்கக் கூடிய தாமரை மலரை வாங்கி வந்து பெருமாளுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரை நம் வீட்டிற்குள் அழைப்போம். அடுத்ததாக பெருமாளுக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் உரிய பச்சைக் கற்பூரத்தை வாங்கி வந்து வைக்க வேண்டும். இது இவர்கள் இருவரின் அருளையும் பரிபூரணமாக பெறுவதற்கு உதவி செய்யும்.
புரட்டாசி மாதத்தின் முதல் நாள் இந்த வழிமுறைகளை யார் ஒருவர் பின்பற்றுகிறார்களோ அவர்களுடைய வீட்டிற்கு பெருமாள், மகாலட்சுமி மற்றும் துளசித்தாயார் வருவதோடு அவர்களின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும்.