கோலாலம்பூர்:
முகிப்பா (Muhibbah) இலகு ரயில் (LRT) நிலையத்தின் தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்து நடனமாடிய இரண்டு பதின்ம வயது சிறுவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு 11.52 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிளாட்பாரம் 1-இல் உள்ள தண்டவாளத்தில் ஒரு சிறுவன் வேண்டுமென்றே குதித்து, பொழுதுபோக்கிற்காக நடனமாடுவதை அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் சிசிடிவி (CCTV) கேமரா மூலம் கண்டறிந்தனர்.
16 மற்றும் 17 வயதுடைய அந்த இரு சிறுவர்களும் உடனடியாக துணைப் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் புக்கிட் ஜலீல் காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று, செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் முகமட் ரோஸ்டி தாவூட் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு 1991 இரயில்வே சட்டத்தின் 62-வது பிரிவின் கீழ் (தண்டவாளத்தில் அத்துமீறி நுழைதல்) விசாரணை செய்யப்படுகிறது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த வழக்கின் விசாரணை அறிக்கை இன்று அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், சம்பந்தப்பட்டவர்கள் சிறுவர்கள் என்பதாலும், தொடர் தடுப்புக்காவல் அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதாலும் அவர்களை விடுவிக்க அரசு வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார்.
“பொழுதுபோக்கிற்காகச் செய்யப்படும் இத்தகைய ஆபத்தான செயல்கள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். பொது இடங்களிலும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்” என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



















