ஈப்போ:
மஞ்சோங் பந்தாய் ரெமிஸ் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட கனமழை மற்றும் பலத்த புயல் காற்றில் 18 வீடுகளும் ஒரு பள்ளிவாசலும் சேதமடைந்தன.
இந்த சம்பவம் குறித்து தகவல், மாவட்டப் பேரிடர் மேலாண்மை செயல்குழுவின் புலனாய்வு குழுவின் மூலம் இன்று காலை 8.56 மணியளவில் பெறப்பட்டதாக மஞ்சோங் மாவட்ட மலேசிய குடிமைத் தற்காப்புப் படை (APM) செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சம்பவம் நள்ளிரவு 12.30 மணியளவில் நிகழ்ந்ததாகவும், அதனைத் தொடர்ந்து மதியம் 12.20 மணிக்கு APM உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
தாமான் நெலாயன் 2, ஜாலான் பெங்கலான் பாரு மற்றும் கம்போங் சீனா பகுதிகளில் பல வீடுகளின் கூரைகள் பறந்தது, பள்ளிவாசல் மற்றும் சில வீடுகளில் கசிவுகள் ஏற்பட்டது ஆகியவை ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டன.
மேகமூட்டமான வானிலை நிலவும் நிலையில், பாதிக்கப்பட்ட வீடுகளில் அவசர பழுதுபார்ப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், தேவையான பராமரிப்பு நடவடிக்கைகள் வானிலை சூழ்நிலைக்கேற்ப மேற்கொள்ளப்படுவதாகவும் APM தெரிவித்துள்ளது.
சம்பவத்துக்கான மேலதிக தகவல்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நிலவரங்களை மாவட்ட APM அவ்வப்போது வழங்கி வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
























