ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரம் குறித்து அக்டோபரில் முடிவு செய்யப்படும் – மந்திரி பெசார்

ஜோகூர்:

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தை அமைப்பதற்கான திட்ட வரைவை மலேசியாவும் சிங்கப்பூரும் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜோகூர் மந்திரி பெசார் ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் இரு நாட்டுப் பிரதமர்களின் சந்திப்பில் இதுகுறித்து மேலும் கலந்துரையாடப்படும் என்றார் அவர்.

சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் அந்த சந்திப்பில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்துப் பேசுவார்.

கடந்த ஜூலை 14ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்ற இஸ்கந்தர் மலேசியாவுக்கான 16வது மலேசியா-சிங்கப்பூர் கூட்டு அமைச்சர்நிலைக் குழுக் கூட்டத்தில், சிறப்புப் பொருளியல் வட்டாரம் அமைப்பதன் தொடர்பில் இணக்கம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மந்திரி பெசார், இருதரப்பு வளர்ச்சி, வளப்பத்திற்கு இது உதவும் என்றார்.

ஜோகூரும் சிங்கப்பூரும் மேலும் அணுக்கமாக ஒத்துழைத்து இரு நாட்டு மக்கள் நலனை உறுதிப்படுத்தும் என்று ஓன் ஹஃபிஸ் காஸி கூறினார்.

ஏற்கெனவே பல பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ‘ஃபாரஸ்ட் சிட்டி’ பெருந்திட்டம் சிறப்பு நிதி வட்டாரத்துக்கானது என்று அறிவித்திருந்த திரு அன்வார், சிங்கப்பூருக்கு அருகில் அமைந்திருப்பதால் ஜோகூருக்கு தனித்தன்மை இருப்பதாகவும் இரு தரப்பும் ஒன்றுக்கொன்று போட்டியாகச் செயல்படுவதற்குப் பதில் ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here