PTPTN: உயர்கல்வி முன்பணக் கடன் 27,674 மாணவர்களுக்கு 41.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர், 

PTPTN எனப்படும் தேசிய உயர்கல்வி வாரியம் வழி பொருளாதாரப் பின்னணி இனம், சமய வேறுபாடின்றி மலேசிய சமுதாயத்தின் பிள்ளைகள் அனைவரும் உயர்கல்வியைப் பெற வேண்டும் என்பதில் அதீத அக்கறை கொண்டுள்ளது.
உயர்கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் PTPTN அரசாங்கப் பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆகியவற்றில் உயர்கல்வியைப் பெறுவதற்கு வாய்ப்பைப் பெற்றிருக்கும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி முன்பணக் கடனாக தலா 1,500 ரிங்கிட்டை வழங்குகிறது என்று நேற்று இங்கு வெளியிடப்பட்ட அதன் ஓர் அறிக்கை தெரிவித்தது.

-புக்கிட் குளுகோரில் ஒரு மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று உயர்கல்வி முன்கடன் நிதியைப் பெற்றிருக்கும் மாணவியிடம் டத்தோஸ்ரீ நோர்லிஸா நலம் விசாரித்தபோது…

அரசாங்க உயர்கல்விக் கழகங்களில் சேர்வதற்கு யுபியு ஆன்லைன் வழி விண்ணப்பம் செய்யும்போது இந்த முன்பணக் கல்விக் கடனுக்கு ஒப்புக்கொண்ட மலேசிய பிரஜைகளைக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதுதவிர சும்பாங்கான் துனாய் ரஹ்மா (எஸ்டிஆர்) ரொக்க உதவித் தொகை பெறும் பெற்றோரின் அல்லது பாதுகாவலர்களின் பிள்ளைகளுக்கும் இந்தக் கல்வி முன்பண உதவி வழங்கப்படுகிறது. 1999ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 2025 ஆகஸ்டு 31ஆம் தேதி வரை 990,646 மாணவர்களுக்கு மொத்தம் 1.46 பில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டிருக்கிறது.
2025 அக்டோபர் தவணையில் அரசாங்கப் பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் இளங்கலைப் பட்டப்படிப்புக்கு முதன்முதலாக கால்பதிக்கும் 27,674 மாணவர்களுக்கு மொத்தம் 41.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

– மற்றொரு மாணவியின் வீட்டுக்கு நேரில் வருகை தந்து டத்தோஸ்ரீ நோர்லிஸா கடன் நிதிக்கான உத்தரவாதக் கடிதத்தை வழங்கியபோது…

இந்தப் பணம் தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை my PTPTN செயலி அல்லது நாடு முழுவதும் உள்ள பேங்க் இஸ்லாம் மலேசியா பெர்ஹாட் வங்கி முகப்பிடங்களில் 2025 செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கி சரிபார்த்துக் கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 செப்டம்பர் 18ஆம் தேதி உயர்கல்வி முன்கடன் பெற்றிருக்கும் பினாங்கு, புக்கிட் குளுகோரைச் சேர்ந்த ஒரு மாணவியின் இல்லத்திற்கு நேரில் வருகை புரிந்த PTPTN தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் அதற்கான கடிதத்தை ஒப்படைத்தார். அவருடன் PTPTN பினாங்கு மாநில இயக்குநர் முகமட் மூசின் அப்துல் ரஹ்மானும் உடன் சென்றார்.

மாணவர்களின் நலன்களில் PTPTN எப்போதும் அக்கறை கொண்டிருக்கிறது. உயர்கல்வியைத் தொடங்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் நிதிச்சுமையைக் குறைப்பதற்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. இந்த உயர்கல்வி முன்பணக் கடனானது மாணவர் நலனில் PTPTN எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளது என்பதைப் பிரதிபலிக்கிறது என்று டத்தோஸ்ரீ நோர்லிஸா கூறினார்.

டத்தோஸ்ரீ நோர்லிஸா (வலமிருந்து இரண்டாவது) 1,500 ரிங்கிட் உயர்கல்வி முன்பணக்கடனுக்கான உத்தரவாதக் கடிதத்தை ஒரு மாணவியிடம் வழங்குகிறார்

பினாங்கில் மட்டும் 1,380 மாணவர்களுக்கு மொத்தம் 2.07 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. புக்கிட் குளுகோர் பகுதியில் மட்டும் 88 மாணவர்களுக்கு 132, 000 ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. உயர்கல்வியைத் தொடங்கியிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அவர் தம்முடைய நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். இவர்கள் அனைவரும் நாட்டின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் என்றும் அவர் சொன்னார்.

நாடு, இனம் ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக நாம் இவர்களுக்கு வழங்கும் இந்த நிதி ஒரு மிகப் பெரிய முதலீடாகும். நிதிப்பற்றாக்குறை என்பது இவர்களின் உயர்கல்விக் கனவுகளுக்கு ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதை PTPTN உறுதி செய்து வருகிறது என்று டத்தோஸ்ரீ நோர்லிஸா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here