புக்கிட் மெர்தாஜாம்:
செப்டம்பர் இறுதி முதல் நவம்பர் வரை கனமழையும் வெள்ள அபாயமும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பினாங்கு மாநிலம் முழுவதும் அதிகாரிகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகளை வரவேற்கும் பினாங்கில், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களிலும் மொத்தம் 256 முக்கிய வெள்ள ஆபத்து பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று, பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் முஹமட் ஷோகி ஹம்சா கூறினார்.
அதில் வடகிழக்கு மாவட்டத்தில் 41, தென்மேற்கு மாவட்டத்தில் 41, செபெராங் பிறை உத்தராவில் 66, செபெராங் பிறை 88 மற்றும் செபெராங் பிறை தெரற்கில் 20 பகுதிகள் அடங்கும்.
“இந்த பகுதிகளில்தான் எங்கள் கண்காணிப்பும், வளங்களின் ஒதுக்கீடும் அதிகரிக்கப்படும். இதன்மூலம் வெள்ளததால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும்,” என்று அவர் இன்று நடைபெற்ற ஓட்டல் விருந்தினர் பாதுகாப்பு வீடியோ வெளியீட்டு விழாவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் சௌ கான் யியோ தொடங்கி வைத்தார்.
ஷோகி மேலும் கூறுகையில்:
“கடந்த ஆண்டு பெரிய அளவிலான வெள்ளம் இல்லாவிட்டாலும், எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் செயல்படுகிறோம். முன்கூட்டியே எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன், இந்த பருவத்தைக் பாதுகாப்பாக சமாளிக்க நம்புகிறோம்,” என்றார்.
மாநிலத்தின் 800 தீயணைப்புப் பணியாளர்கள் வெள்ள அவசரநிலைக்கு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
















