பாசிர் கூடாங்:
ஜாலான் பிளாட்டினம் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நேற்றிரவு கடும் இரசாயன வாயுக்கசிவு ஏற்பட்டதில், மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் இரவு 11.11 மணியளவில் நடந்தது. காயமடைந்த மூவரும் ஹாஸ்மாட் குழு வருவதற்கு முன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்றும், தற்போது அவர்களின் நிலைமை சீராக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
குறித்த தொழிற்சாலையின் உள்ளே ஹைட்ரஜன் சல்பைடு (Hydrogen Sulphide – H₂S) வாயு கசிந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு தளபதி சர்ஹான் அக்மல் முகமட் கூறினார்.
“ஆரம்பக் கணக்கெடுப்பில், ஹைட்ரஜன் சல்பைடு அளவு 8.9 பாக்ஸ் பர் மில்லியன் (ppm) எனப் பதிவாகியுள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வாயு நச்சுத்தன்மை கொண்டதும், எரியக்கூடியதும் ஆகும். ‘அழுகிய முட்டை’ நாற்றம் போல துர்நாற்றம் வீசும் என்றும், தற்போது 8.9 ppm அளவில் வெளிப்பாடு ஏற்படும்போது கண்கள், மூக்கு, தொண்டை எரிச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம் ஆகியவை ஏற்படும். அதேநேரம் இந்த வாயுக்கசிவு நீண்டகாலம் அல்லது அதிக அளவில் வெளிப்பாடு ஏற்பட்டால் சுவாசக்குறைபாடு, மயக்கம் மற்றும் உயிரிழப்பும் ஏற்படலாம்.
அங்கு துரோகமாக செயற்பட்ட ஹாஸ்மாட் குழுவினர் தொழிற்சாலையின் உள்ளே காற்றோட்டம் ஏற்படுத்தியும், fogging என்பவற்றை மேற்கொண்டு, நிலைமையை வழமைக்கு கொண்டுவந்தனர் என்று அவர் சொன்னார்.
அதேநேரம் இச்சம்பவம் தற்போது தீயணைப்பு துறையின் கீழ் விசாரணையில் உள்ளது என்று, ஜோகூர் மாநில சுற்றுச்சூழல் துறை (DOE) இயக்குநர் டாக்டர் முகமட் ஃபாமி யூசுப் தெரிவித்தார்.
“மாசுபாடு எவ்வளவு பரவியுள்ளது என்பதை மதிப்பிட கூடுதல் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. நாற்றம் அருகிலுள்ள பிற தொழிற்சாலைகளுக்கும் பரவியதா அல்லது ஒரே வளாகத்திற்குள் மட்டுமே இருந்ததா என்பதை ஆராய்கிறோம். தேவையற்ற ஊகங்கள் பொதுமக்களில் பீதி ஏற்படுத்தக்கூடும்,” என அவர் எச்சரித்தார்.




















